திங்கள், 24 ஜூன், 2024

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் மரணத்துக்கு காரணமா? உடல் மீண்டும் தோண்டி எடுப்பு

 கள்ளக்குறிச்சி மாதவச்சேரி கிராமத்தில் ஜூன் 18ஆம் தேதி உயிரிழந்தவரின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட உடற்கூராய்வுகள் நடத்தப்பட்டன. அதாவது இளையராஜா மற்றும் ஜெயமுருகன் ஆகியோர் கள்ளச்சாராயம் அருந்தி மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் அவரது உறவினர்கள் இளையராஜா உடலை தகனம் செய்துவிட்டனர். ஜெயமுருகனின் உடல் புதைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஜெயமுருகனின் உடலை தோண்டி எடுத்து அதிகாரிகள் உடற்கூராய்வு நடத்தினர். உறவினர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து, அதிகாரிகள் சின்னச்சேலம் வட்டாட்சியர் முன்னிலையில் முண்டியம்பாக்கம் மருத்துவர்கள் குழு இந்தப் பிரேத பரிசோதனையை நடத்தினார்கள்.

ஜூன் 19 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் பெண்கள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளியும் அடங்குவர். மேலும் 82 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சோகத்தை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜாதவத்தை இடமாற்றம் செய்தது. மேலும், காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், இந்த துயர சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/the-body-of-the-deceased-in-kallakurichi-was-exhumed-again-and-post-mortem-was-conducted-again-4776544