செவ்வாய், 25 ஜூன், 2024

10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் 2.5 கோடி சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளது – மல்லிகர்ஜுன கார்கே குற்றச்சாட்டு

 

10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் 2.5 கோடி சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகர்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

பணமதிப்பிழப்பு, தவறான வரிமுறை (ஜிஎஸ்டி), பெருந்தொற்று காலத்தில் நிர்வாகத் திறமையின்மை போன்றவை சிறு, குறு தொழில்கள் மற்றும் முறைசாரா தொழில் பிரிவுகள் மீது தொடர்ந்து தாக்குதலை ஏற்படுத்துகிறது. முறைசாரா தொழில் பிரிவுகள் இணைக்கப்படாததன் விளைவாக கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 54 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது நரேந்திர மோடி தலைமையிலான அரசு வெளியிட்ட தரவுகளில் உள்ளன. ஆனால் உண்மை என்னவெனில், 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் 2.5 கோடி சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளன. 12 கோடி வேலைவாய்ப்புகளை வழங்கும் 72 சதவீத சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பூஜ்ஜிய வளர்ச்சியை அடைந்துள்ளன.

ஜிஎஸ்டி வரிமுறையில் உள்ள பல்வேறு அடுக்குகள் சிறு, குறு தொழில் துறைகளை செயலிழக்கச் செய்துள்ளது. முறை சாரா தொழில்களில் ஊக்கத் தொகையின்மை, போதிய விழிப்புணர்வின்மை போன்றவை இவற்றின் அழிவை தீவிரப்படுத்தியுள்ளது. விவசாயத்தில் 35 பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதால், விவசாயிகளின் வருவாய் குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியால் குடும்பங்களின் சேமிப்பு 0 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. இருப்பினும், மனித உயிர்களைச் சேராதவர் என தன்னை கூறிக்கொள்ளும் பிரதமர், தங்கள் ஜிஎஸ்டியால் நுகர்வோர் பயன் அடைந்து வருவதாகக் கூறிவருகிறார்.

தற்பெருமை பேசுவதில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்துவிட்டு, பொருளாதார குழப்பத்தின் உண்மைத்தன்மையை பாருங்கள் பிரதமர் மோடி என கார்கே பதிவிட்டுள்ளார்.


source https://news7tamil.live/2-5-crore-small-and-micro-industries-paralyzed-in-10-years-of-bjp-rule-mallikarjuna-kharge-alleges.html