புதன், 26 ஜூன், 2024

திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தவே சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

 

திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தவே சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி ஈடுபட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  சட்டப்பேரவையில் ஏற்கனவே இரண்டு நாட்கள் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்து கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும்,  கேள்வி நேரத்திற்கு முன்பே கள்ளக்குறிச்சி விவாகரம் தொடர்பாக விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்து பேரவை நிகழ்வுகளை புறக்கணித்தனர்.  இதனைத் தொடர்ந்து நேற்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து வருவாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கருப்பு சட்டை அணிந்து அதிமுக தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இந்த நிலையில் சட்டப்பேரவை இன்று காலை 9:30மணிக்கு தொடங்கியதும்  சபாநாயகர் அப்பாவு திருக்குறளை வாசித்துவிட்டு தொடர்ந்து பேசத் தொடங்கினார்.  உடனே  அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.  மேலும் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அவர்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக 20.6.24 அன்று அவையில் விரிவாக சட்டமன்ற உறுப்பினர் பேசினார்கள்.  அன்று அதிமுக உறுப்பினர்கள் தங்களது கருத்தை பதிவு செய்து இருக்க வேண்டும்.  விதிமுறைகளை மீறி இந்த விவாரம் குறித்து பேச வேண்டும் என அதிமுகவினர் ரகளை செய்துள்ளனர்.

வேண்டுமென்று திட்டமிட்டே கலவரம் ஏற்படுத்த இதை செய்துள்ளார்கள்.  மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் போது பிரதான எதிர்க்கட்சி அவையில் இருக்க வேண்டும் என்று நான் வைத்த கோரிக்கையின் பேரில் சபாநாயகர் அவர்களை உள்ளே அனுமதித்தார்.

மக்களவைத் தேர்தலில் 40 க்கு 40 க்கு வெற்றி பெற்றது அவர்களின் கண்கணை உறுத்துகிறது.  கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 24 மணி நேரத்தில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் நடத்தியது நியாயம் தான்.  அது நியாயமான நடைமுறைதான்.

அதிமுகவின் ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சி தலைவர் மீதான ஒரு வழக்கில் ஆர்.எஸ் .பாரதி நீதிமன்றம் சென்றார்.  அதில் நீதிமன்றம்  சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது அப்போது சி.பி.ஐ விசாரணைக்கு இடைக்கால தடை வாங்கிய வீராதி வீரர் தான் எடப்பாடி பழனிச்சாமி.  அதிமுகவினர் கடந்த காலத்தில் எப்படி நடந்துள்ளார்கள் என தெரியும்.  எள்முனை அளவு கூட அதிமுகவிடம் ஜனநாயகம் இருக்காது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்த நிலையில் நடப்பு கூட்டத் தொடர் முடியும் வரை அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத் தொடர் முழுவதும் வேண்டாம் மாறாக இன்றைய ஒருநாள் மட்டும் சஸ்பெண்ட் செய்யுங்கள் என பேசினார்.  இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும், சட்டப்பேரவையின் இன்றைய  நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

source https://news7tamil.live/aiadmks-amali-chief-minister-m-k-stals-accusation-in-the-legislative-assembly-to-create-riots.html