காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்து ரேபரேலி தொகுதியின் உறுப்பினராக உள்ளார். மக்களவையில் உறுப்பினராகவும் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். மக்களவைத் தேர்தலில் 234 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தனித்து 99 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது.
இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் இயற்றியது. இதனை ராகுல் காந்தி ஏற்று கொண்டார். இந்த சூழலில் இன்று காலை கூடிய மக்களவைக் கூட்டத்தொடரிலும், ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக செயல்படத் தொடங்கினார்.
புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவை மரபுப்படி, பிரதமர் நரேந்திர மோடியுடன், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தார் ராகுல் காந்தி. இதனையடுத்து, அவர் எதிர்க்கட்சித் தலைவராக மக்களவையில் சபாநாயகரை வாழ்த்தி தனது முதல் உரையையும் நிகழ்த்தினார். இந்த நிலையில், மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/opposition-leader-rahul-gandhi-lok-sabha-speaker-approval.html