வெள்ளி, 14 ஜூன், 2024

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் – வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

 

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் – வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 14 6 2024

விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது.

திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இந்த தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கவுள்ளது.

வேட்புமனுதாக்கலுக்கான கடைசி தேதி ஜூன் 21 ஆகும்.  மிக குறைந்த காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் உள்ளன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் விருப்பமனு வழங்கப்படுவதில்லை எனவும் நேரடியாக திமுக வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்த நிலையில்,  விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மாநில அந்தஸ்து பெற்ற பிறகு நாம் தமிழர் கட்சி போட்டியிடும் முதல் தேர்தல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆகும். அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்களது வேட்பு மனுவை விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என்றும், விழுப்புரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரான மு.சந்திரசேகரை தேர்தல் நடத்தும் அலுவலராகவும், விக்கிரவாண்டி வட்டாட்சியர் க.யுவராஜை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் நியமித்து மாவட்ட ஆட்சியர் சி. பழனி உத்தரவிட்டார்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-இல் நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 26 பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் உள்ளதால், அதன் பிறகு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். இதனைத் தொடர்ந்து, ஜூலை 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 13- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

source https://news7tamil.live/vikravandi-by-election-nomination-filing-begins-today.html