ஞாயிறு, 23 ஜூன், 2024

குடைச்சல் கொடுக்கும் நீட் சர்ச்சை: மவுனம் சாதிக்கும் முக்கிய கூட்டணி காட்சிகள்

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) ரத்து செய்யக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க-வின் முக்கிய என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி) மற்றும் ஜனதா தளம் (ஐக்கிய) ஆகியவை அமைதியாக காத்து வருகின்றன. 

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்றனர். அவர்களுடன் பயிற்சி பெற்ற சக மாணவர்களும் அதிக சதவீத மதிப்பெண்களுடன் முதல் தரவரிசையைப் பெற்றனர். இந்த ஆண்டு ஆந்திராவில் இருந்து மட்டும் 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் எழுதியதாக கூறப்படுகிறது.

ஆந்திராவின் ஆளும் கட்சியான சந்திரபாபு நாயுடு தலைமையிலான டி.டி.பி, போராட்டங்களுக்கு ஆதரவாகவோ அல்லது தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு எதிராகவோ (என்.டி.ஏ) இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்பிக்கள் உள்ளனர். இதில் இருவர் மத்திய அமைச்சர்களாகவும் உள்ளனர். 

இதுதொடர்பாக மூத்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்து கேட்டது. அப்போது, "இந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்வதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை" என்று பெயரை வெளியிட விரும்பாத ஒரு தலைவர் கூறினார். மற்றவர்கள் போராட்டங்கள் குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும் கூறினர். "கட்சி அளவில் இதை நாங்கள் இன்னும் பரிசீலிக்கவில்லை" என்று மூத்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி ஒருவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக டி.டி.பி-யின் இளைஞர் அணி உறுப்பினர்களும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். "நாங்கள் பதிலளிப்பது குறித்து இன்னும் தயார் செய்யவில்லை," என்று இளைஞர் அணி உறுப்பினர் ஒருவர் கூறினார்.

தற்போதைய ஊழல் வெடித்துள்ள பீகாரில் அரசாங்கத்திற்கு தலைமை வகிக்கும் ஜனதா தளம் (ஐக்கிய) 18-வது மக்களவையில் 12 எம்.பி.க்களைக் கொண்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த பல மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் பங்கேற்று, பல உயர் பதவிகளைப் பெற்ற போதிலும், கட்சியும் மவுனம் காக்கிறது.

அதற்கு பதிலாக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிக்கு விருந்தினர் மாளிகையை முன்பதிவு செய்ததில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) தலைவர் தேஜஸ்வி யாதவின் தனிப்பட்ட செயலாளரின் பங்கை குறிவைத்து விமர்சித்து வருகிறது ஐக்கிய ஜனதா தளம். அத்துடன் தேர்வு செயல்முறை மற்றும் வினாத்தாள் கசிவு குறித்து கருத்து தெரிவிக்காமல் ஒதுங்கியும் வருகிறது. 

பெரும்பாலான ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் இந்த பிரச்சினையில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். வியாழனன்று பாட்னாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்திய ஐக்கிய ஜனதா தளம் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார், தேஜ்சாஹ்வியைத் தாக்கி பேசினார். மேலும் அவர், “வினாத்தாள் கசிவு தொடர்பான முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் தங்கியிருந்த விருந்தினர் மாளிகை, தேஜ்ஷ்வி-யின் தனிப்பட்ட செயலாளரால் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவர் பதிலளிக்க வேண்டும். 

நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் இருக்கும் விவகாரத்தில் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது." என்று கூறினார். 

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கான நுழைவு வாயிலாக உள்ள தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சில மாணவர்களுக்கு சாதகமான முடிவுகள் வழங்கப்பட்டதாகவும் பல மாணவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். 

source  https://tamil.indianexpress.com/india/as-bjp-faces-neet-row-heat-allies-tdp-jdu-silent-tamil-news-4774236