ஞாயிறு, 23 ஜூன், 2024

“40 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்ததால் சட்டமன்றத்தை முடக்க அதிமுக முயற்சி” – அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!

 

40 தொகுதிகளில் அதிமுக தோல்வியை சந்தித்ததால் சட்டமன்றத்தை முடக்க முயற்சிப்பதாக அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டியுள்ளார். 

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக இன்றும் பேரவையில் கேள்வியெழுப்ப அதிமுகவினர் திட்டமிட்டனர்.  இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நேற்று விவாதம் நடத்தப்பட்டது.  உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விளக்கமளித்தார்.

இந்த நிலையில் இன்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தனர்.  இதையடுத்து தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அலுவல் தொடங்கியது.  சபாநாயகர் அப்பாவு கேள்வி-பதிலுக்கான நிகழ்ச்சி நிரல் தொடங்குவதாக அறிவித்தார்.  இந்த சமயத்தில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு,  நினைத்த நேரத்தில் நினைத்ததை பேசும் இடம் சட்டசபை அல்ல.  வினா விடை முடிந்ததும் பேசுவதற்கு அனுமதி தருகிறேன்.  முதல்வராக இருந்த உங்களுக்கு தெரியாதா என எடப்பாடி பழனிசாமியை பார்த்து சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.  இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர் பின்னர் அவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதன்பின்னர் அவை தொடர்ந்து நடைபெற்றது.

இதன் பின்னர் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.  சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக  எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் உதயசூரியன் ஆகியோர் கூறியதாவது:

”பாமக நிறுவனர் ராமதாஸ் எங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூப்பித்தால் பொது வாழ்வில் இருந்து விலக தயார்.  அப்படி நீரூபிக்கப்படாவிட்டால் பாமகவை சேர்ந்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பொது வாழ்வை விட்டு விலகுவார்களா?  தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கட்சி ஸ்டிக்கர்கள் தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதானவர் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது.  அவர் திமுக  நிர்வாகிகள் இல்லை” என தெரிவித்தனர்.

இதேபோல அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவை வளாகத்தில் பேசியதாவது..

”40 தொகுதிகளில் அதிமுக தோல்வியை சந்தித்த காரணத்தால்,  இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி சட்டமன்றத்தை முடக்க முயற்சித்தனர்.  இபிஎஸ் பேச வாய்ப்பு தரவில்லை என குற்றம்சாட்டுகிறார்,  இது அப்பட்டமான பொய்.  வேண்டும் என்றே கேள்வி நேரத்தை கெடுக்கும் நோக்கில் அதிமுகவினர் செயல்பட்டனர்,  சபாநயகரை முற்றுகையிட்டனர்,  பேச வாய்ப்பு வழங்கப்படும் என்ற போதும் அதிமுகவினர் கேட்கவில்லை.

அதிமுகவின் ஆட்சி காலத்தில் திமுகவினர் சட்டமன்றத்திற்குள் போராடினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.  நேற்றே அதிமுகவின் கருத்து தெரிவிக்க முதல்வர் அழைப்பு கொடுத்தும்,  வராமல் ஊடகம் முன்பாக வாய்ப்பு தரவில்லை என இபிஎஸ் கூறுகிறார்.  தோல்வியை மறைக்க எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்கிறார்.” என அமைச்சர் ரகுபதி கூறினார்.


source https://news7tamil.live/attempt-to-freeze-the-assembly-as-aiadmk-faced-defeat-in-40-constituencies-minister-raghupathi-accused.html