செவ்வாய், 25 ஜூன், 2024

“விஷச்சாராய விவகாரத்தில் மலிவான அரசியலை செய்து வருகிறார்கள்”

 

“விஷச்சாராய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் மலிவான அரசியலை செய்து வருகிறார்கள்” – முத்தரசன் பேட்டி!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் மலிவான அரசியலை செய்து வருகிறார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் தெரிவித்ததாவது,

இந்தியாவில் தலைசிறந்த மருத்துவர் உருவாக்க வேண்டும் என நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார்கள். நீட் தேர்வுகள் வருவதற்கு முன்னதாகவே தலைசிறந்த மருத்துவர்கள் சேவை ஆற்றி வருகிறார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தபோதே நீட் தேர்வுகளின் முடிவுகள் முன்னதாகவே வெளியிடப்பட்டதற்கான காரணங்கள் தெரியவில்லை.

நீட் தேர்வு குளறுபடிக்கு மத்திய அரசு மற்றும் மத்திய அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்து விட முடியாது. கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும். நீட் தேர்வு தேவையில்லை எனும் கருத்து தமிழகத்தை கடந்து பல மாநிலங்களில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. 

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு மீட்கப்பட்டு தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு கோடி மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான உரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஐந்தில் ஒரு பங்கு நிதி மட்டுமே தற்போது வழங்கி வருகிறது. நிதியை காரணம் காட்டி தமிழகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை வைத்து அதிமுகவும், பாஜகவும் அரசியல் செய்கிறது. முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை விட வேண்டுமென அதிமுகவும், பாஜகவும் நினைக்கிறது. விஷச்சாராய விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்திருக்க வேண்டும். விஷச்சாராயம் விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்காவிட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுத்திருக்கும். இந்த விவகாரத்தை எதிர்த்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணம் காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள்.

மதுவிலக்கு பிரிவில் உள்ள காவல்துறை கருப்பு ஆடுகள் சாராய வியாபாரிகளிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ஊக்குவிக்கிறார்கள். கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் 15 ஆண்டுகளாக பணியாற்றிய காவல் துறையினர் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின் பின்னர் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் ஆளுநரை சந்தித்து பாஜக அரசியல் செய்கிறது.

கள்ளச்சாராய விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை சந்தித்து தானே பாஜக மனு கொடுத்திருக்க வேண்டும். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் விவாதம் நடத்தி இருக்கலாமே? ஆளுநரிடம் மனு கொடுத்ததால் ஆளுநர் ஆட்சியை கலைத்து விடுவாரா? எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் மலிவான அரசியலை செய்து வருகிறார்கள்.

பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக மக்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக கள்ளக்குறிச்சி விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்”

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/edappadi-palaniswami-and-annamalai-are-doing-cheap-politics-in-the-matter-of-poisoning-mutharasan-interview.html