அலிப்பூர் சிறையில் 18 மாதங்கள் கொடூர சிறைவாசம்! கக்கன் நேர்மைக்கு கிடைத்த பரிசு
1909 ஜூன் 18-ல் மதுரை அருகே தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கக்கன். இவரது தந்தை, கிராமக் கோயில் பூசாரி. வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் விட நேர்ந்தது. 12-வது வயதில் ஒரு வீட்டில் பண்ணை வேலை செய்தார்.
எனினும், பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பள்ளிப்படிப்பை முடித்தார் கக்கன். சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்த காலகட்டம் அது. பள்ளி மாணவனான கக்கனுக்கும் சுதந்திர வேட்கை தொற்றிக்கொண்டது. மாணவப் பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார்.
கக்கனின் காங்கிரஸ் பாசத்தையும் மக்களுக்குத் தொண்டாற்றும் ஆர்வத்தையும் புரிந்துகொண்ட வைத்தியநாதய்யர் இவரைத் தன் வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மதுரையில் உள்ள சேவாலயம் என்கிற விடுதியில் காப்பாளர் வேலையைக் கக்கனுக்கு வாங்கிக் கொடுத்தார்.
1932-ல் சொர்ணம் பார்வதி என்ற பெண்ணை மணந்தார் கக்கன். அதன் பிறகுதான் அதிகளவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
18 மாதங்கள் சிறைவாசம்
1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீஸாரின், கண்ணில் சிக்காமல் இருக்க கக்கன் தலைமறைவாக இயங்கினார்.
ஆனாலும் ஒருகட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.
தமிழகத்தில் நடக்கும் போராட்டம் பற்றிய முழு விவரமும் கக்கனுக்குத் தெரியும் என்பதால், தலைமறைவாக உள்ள மற்ற தலைவர்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லுமாறு காவலர்கள் அவரை சித்திரவதை செய்தனர்.
ஆனால், கக்கனிடமிருந்து ஒரு துப்புகூடக் கிடைக்கவில்லை என்பதால் ஆத்திரம் அடைந்த பிரிட்டிஷ் அரசு அவரை அலிப்பூர் சிறையில் அடைத்தது. அங்கு 18 மாதங்கள் கொடுற சிறைவாசத்தை அனுபவித்தார் கக்கன்.
காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பதவிகள், நாடாளுமன்ற உறுப்பினர், 10 ஆண்டுகள் மாநில துறைகளின் அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தார். பதவியில் இருந்தபோது அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடித்தவர் கக்கன்.
1973-ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் கக்கன்.
தன் வாழ்நாளின் கடைசியில் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பணம் செலுத்த முடியாததால், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். நேர்மையான அரசியலின் அடையாளம் என்று தமிழகமே கொண்டாடும் தலைவர் இறுதியாக, 23 டிசம்பர் 1981 அன்று மரணம் அடைந்தார்.
அதன்பிறகு இன்றுவரை கக்கனைப் போல் இன்னொரு தலைவர் வரவில்லை என்பதுதான் அவர் நிகழ்த்திய வாழ்நாள் சாதனை…
source https://tamil.indianexpress.com/lifestyle/congress-leader-kakkan-life-story-4769498