ஞாயிறு, 23 ஜூன், 2024

நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய கல்வி அமைச்சகம்!

 

நீட் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை செய்ய மத்திய அரசு சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் நுழைவுத் தேர்வை பல லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகின. தற்போது நீட் நுழைவுத் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் பெரும் புயலைக் கிளப்பி வருகின்றன. ஒவ்வொரு நாளும் நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே விற்பனை செய்ததாக உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரிகளின் மாணவர் அமைப்புகள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதனையடுத்து தேசியத் தேர்வு முகமை தலைவர் சுபோத் குமார் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரதீப் சிங் கரோலாவுக்கு கூடுதல் பொறுப்பாக தேசியத் தேர்வு முகமைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நீட், நெட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகள் முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.


source https://news7tamil.live/union-education-ministry-orders-cbi-probe-into-neet-entrance-exam-irregularities.html