வெள்ளி, 28 ஜூன், 2024

திருச்சியில் 88 போலீசுக்கு ஒரே நேரத்தில் மெமோ; அதிரடி காட்டிய காவல் ஆணையர்

 திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி கட்டுப்பாட்டில் 14 காவல் நிலையங்கள் உள்ளன. திருச்சி மாநகரில் குற்றங்கள், திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க மாநகர காவல் ஆணையர் பல அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தாலும் அதை கடந்து குற்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.


திருச்சி மாநகரில் கஞ்சா பழக்கம் , லாட்டரி விற்பனை, போதை மாத்திரைகள் விற்பனை, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை ஆகியவற்றை தடை செய்வதற்கு 24 மணி நேரமும் மாநகர் முழுவதும் தீவிர சோதனை செய்யப்பட்டு பழைய குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு திருச்சி மாநகரில் பல்வேறு வழிப்பறி சம்பவங்கள், செயின் பறிப்பு சம்பவங்கள் ஒரே நபர்களால் தொடர்ந்து அரங்கேறின.

இது குறித்த புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. காந்தி மார்க்கெட் காவல் சரக சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் மாநகரம் முழுவதும் ஆய்வாளர்கள், காவலர்கள் என 88 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததையும் மீறி, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறுவர்கள், ஒரு வாலிபர் என மூன்று பேர் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு, வழிப்பறி என பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அதிரடியாக இரவு காவல் பணியில் அசட்டையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் – இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 88 பேருக்கு வார்னிங் மெமோ கொடுத்து நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை ஒரு எச்சரிக்கையாகும், இனியும் அலட்சியமாக இருந்தால் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நடவடிக்கை திருச்சி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/a-memo-has-been-issued-to-88-police-in-trichy-simultaneously-4783722