எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஜூன் 22-ம் தேதி மீன்பிடிப்பதற்கான
மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மூன்று விசைப்படகுகளையும், அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்து காங்கேஷன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றது.
அதன்பின் மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது. தொடர்ந்து, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மூன்று விசைப்படகுகள் மற்றும் 22 மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும், 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை சிறையில் வாழும் தமிழக மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து பெரிய ரக விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூன் 24) கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற, 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்த 10 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
source https://news7tamil.live/sri-lankan-navys-atrocity-continues-10-nagai-fishermen-arrested.html