திங்கள், 17 ஜூன், 2024

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் – ஸ்டாலின்

 தகுதியின் அளவுகோலாகக் கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு பரவலான மோசடியாக இருந்து வருகிறது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இளநிலை மருத்துவ சேர்க்கைக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG) மே மாதம் 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 21 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இந்தநிலையில், பீகார் மாநிலங்களில் நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக சில கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. 

இந்த சலசலப்புக்கு மத்தியில் கடந்த 4 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வு முடிவுகளிலும் சர்ச்சை வெடித்தது. முதன்முறையாக 67 பேர் முழுமையான 720க்கு 720 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பெற்றனர், இதில் 44 பேர் கருணை மதிப்பெண்கள் பெற்றதால் முதலிடம் பெற்றனர். மேலும் சில தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 1,563 பேருக்கு நேர இழப்பு காரணமாக கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக உச்ச நீதிமன்றத்திலும், 7 உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படும் என்றும், அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் உறுதி அளித்தன.

இந்தநிலையில், நீட் தேர்வில் முறைகேடுகள் தொடர்பாக குஜராத் காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. இதனைக் குறிப்பிட்டு நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

நீட் தேர்வை (NEET) சுற்றி நடந்து வரும் சர்ச்சைகள் அதன் அடிப்படையில் சமத்துவமின்மை தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வரும் சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். மாறாக, அத்தகைய மாணவர்களின் வாய்ப்புகளை நீட் தடுக்கிறது.

தேசிய தேர்வு முகமைக்கு (NTA) மத்திய கல்வி அமைச்சர் தற்காப்பு தெரிவித்த போதிலும், சமீபத்திய நிகழ்வுகள் வித்தியாசமான படத்தை வரைகின்றன. பல கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் மற்றும் எட்டு வெற்று காசோலைகளை உள்ளடக்கிய பண பலன்களுக்காக ஓ.எம்.ஆர் தாள்களை கண்காணிப்பாளர்கள் சேதப்படுத்தியதாக குஜராத் காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. ஒரு பள்ளி முதல்வர், ஒரு இயற்பியல் ஆசிரியர் மற்றும் பல நீட் பயிற்சி மையங்கள் சம்பந்தப்பட்ட இந்த சதி, முறையான மாற்றத்திற்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தியாகி அனிதா முதல் எண்ணற்ற மாணவர்கள் வரை பரிதாபகரமாகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதை நாம் நேரில் பார்த்திருக்கிறோம்.

தகுதியின் அளவுகோலாகக் கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு பரவலான மோசடியாக மீண்டும் மீண்டும் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாணவர் விரோத, சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை பாதுகாப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-cm-stalin-says-central-govt-should-stop-to-support-neet-exam-4764444