மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பாரிஸ் பாராலிம்பிக் 2024 ஆடவர் ஒற்றையர் எஸ்.எல் 3 பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீரர் குமார் நிதேஷ் குமார் பிரிட்டனின் டேனியல் பெத்தேலை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 21-14 என்ற புள்ளிக்கணக்கில் நிதேஷ் குமாரும், 2வது செட்டை 21-18 என்ற புள்ளிக்கணக்கில் டேனியல் பெத்தேலும் கைப்பற்றினர்.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட் பரபரப்பாக நடைபெற்றது. இதில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இறுதியில் 3-வது செட்டில் 23-21 என்ற புள்ளிக்கணக்கில் டேனியல் பெத்தேலை வீழ்த்தி நிதேஷ் குமார் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். தோல்வி கண்ட டேனியல் பெத்தேல் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
யார் இந்த நிதேஷ் குமார்?
ஹரியானாவின் சார்க்கி தாத்ரியைச் சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீரரான நிதேஷ் குமார், இன்று திங்கள்கிழமை பாரிஸ் பாராலிம்பிக் பாரா பேட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் எஸ்.எல் 3 பிரிவின் இறுதிப் போட்டியில் கிரேட் பிரிட்டனின் டேனியல் பெத்தேலை வீழ்த்தி இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.
எஸ்.எல் 3 கிளாஸ் வீரர்கள், நித்தேஷ் போன்றவர்கள், மிகவும் கடுமையான கீழ் மூட்டு குறைபாடுகளுடன் போட்டியிடுகின்றனர். அவர்கள் அரை அகல மைதானத்தில் விளையாட வேண்டும்.
29 வயதான நித்தேஷுக்கு முதல் காதல் கால்பந்து தான். இருப்பினும், 2009 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு சோகமான விபத்து அவரது லட்சியங்களை சிதைத்தது. இந்த விபத்து காரணமாக மாதக்கணக்கில் அவர் படுத்த படுக்கையாகினார். அவருக்கு நிரந்தரமாக கால் பாதிக்கப்பட்டது. இந்த பின்னடைவு இருந்தபோதிலும், நிதீஷின் விளையாட்டு மீதான காதல் மாறாமல் இருந்தது.
ஐ.ஐ.டி-மண்டியில் இருந்த காலத்தில், நித்தேஷ் பேட்மிண்டனில் தனக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டுபிடித்தார். அவர் களத்தில் தனது திறமைகளை மெருகேற்றினார், அடிக்கடி திறமையானவர்களுக்கு சவால் விடுத்தார்.
2016 இல், ஃபரிதாபாத்தில் நடந்த பாரா நேஷனல்ஸில் ஹரியானாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார் நித்தேஷ். அவர் தனது அபாரமான ஆட்டத் திறனை வெளிப்படுத்திய நிலையில், அந்த அற்புதமான அறிமுகமானது அவருக்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது. அடுத்த ஆண்டு, தேசிய சாம்பியன்ஷிப்பில் ஒற்றையர் பிரிவில் வெள்ளியையும் இரட்டையர் பிரிவில் வெண்கலத்தையும் வென்றார்.
2020ல் டோக்கியோ பாராலிம்பிக் பதக்கம் வென்ற பிரமோத் மற்றும் மனோஜ் ஆகியோரை தோற்கடித்து தேசிய சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை உறுதி செய்து நித்தேஷ் மகுடம் சூடினார். உள்நாட்டுப் போட்டியில் அவரது ஆதிக்கம் இந்தியாவின் முன்னணி பாரா-பேட்மிண்டன் விளையாட்டு வீரர்களில் ஒருவராக அவரது நிலையை உறுதிப்படுத்தியது.
தேசிய போட்டிகளில் பதக்கங்களுக்கு அப்பால், நித்தேஷ் சர்வதேச அரங்கிலும் சிறந்து விளங்கினார், பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். இப்போது அவர் தனது பாராலிம்பிக் போட்டியில் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளார்.
நிதேஷ் குமார் சாதனைகள்:-
ஆசிய பாரா கேம்ஸ் (2022) - எம்.டி.யில் தங்கப் பதக்கம்
ஆசிய பாரா கேம்ஸ் (2022) - எம்.எஸ்-இல் வெள்ளிப் பதக்கம்
ஆசிய பாரா கேம்ஸ் (2022) – எக்ஸ்.டி-யில் வெண்கலப் பதக்கம்
ஆசிய பாரா கேம்ஸ் (2018) - எம்.டி-யில் வெண்கலப் பதக்கம்
உலக சாம்பியன்ஷிப் (2024) - எம்.எஸ்-இல் வெண்கலப் பதக்கம்
உலக சாம்பியன்ஷிப் (2022) - எம்.எஸ்- இல் வெள்ளிப் பதக்கம்
உலக சாம்பியன்ஷிப் (2019) - எம்.டி-இல் வெள்ளிப் பதக்கம்.
source https://tamil.indianexpress.com/sports/who-is-nitesh-kumar-badminton-player-who-won-gold-medal-at-paris-paralympics-tamil-news-6944609