கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் ராஜினாமா செய்ய முன்வந்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை தெரிவித்தார்.
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கைகளில், கமிஷனரின் ராஜினாமாவும் ஒன்றாகும்.
“காவல்துறை கமிஷனர் என்னிடம் ராஜினாமா கடிதம் கொடுக்க வந்தார்... ஆனால் துர்கா பூஜைக்கு முன் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? கொல்கத்தாவின் அனைத்து சாலைகளும், நிலைமையை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதும் அவருக்குத் தெரியும். பண்டிகைக் காலத்திற்குப் பிறகு, இதைப் பற்றி நாம் சிந்திக்கலாம், ”என்று நபன்னா மாநில செயலகத்தில் நடந்த நிர்வாக ஆய்வுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி கூறினார்.
வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களை வேலைக்குத் திரும்புமாறு வலியுறுத்திய பானர்ஜி, துர்கா பூஜை வருவதையொட்டி திருவிழாக்களுக்குத் திரும்புமாறும், சிபிஐ தனது விசாரணைகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள செமினார் ஹாலில், பயிற்சி மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது, அப்போதிருந்து மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கூறியது.
நபன்னாவில் பேசிய மம்தா, போராட்டக்காரர்களை சந்திக்க முன்வந்தார். ‘அவர்கள் ஐந்து-ஆறு பேர் கொண்ட குழுக்களாக என்னுடன் பேச வரலாம். அவர்களின் கோரிக்கைகளை கேட்க நான் தயாராக இருக்கிறேன். சுகாதார செயலாளர் ஏற்கனவே அவர்களுடன் அமர்ந்து பேசி அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றியதாக’ கூறினார்.
போராட்டங்களை கையாண்ட விதம் குறித்து விமர்சனத்திற்கு ஆளான கொல்கத்தா காவல்துறையை ஆதரித்த அவர், ’காவல்துறையினர் பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளனர். மேலும் போராட்டக்காரர்கள் தங்கள் இயக்கத்தை நடத்த அனுமதித்தனர் - இது பீகார், உத்தரபிரதேசம் அல்லது பிற மாநிலங்களில் ஒருபோதும் அனுமதிக்கப்படாது. போராட்டக்காரர்கள் போராட்டத்திற்கு அனுமதி கூட கேட்கவில்லை, ஆனால் அப்போதும், நாங்கள் அதை அனுமதித்தோம்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் இரவு நேரத்திலும் ஒலிப்பெருக்கிகளை (microphones) பயன்படுத்தத் தொடங்கிய பின்னரும் தனது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒவ்வொரு நாளும், இயக்கத்தின் பெயரில், அவர்கள் அவற்றை (மைக்ரோபோன்) பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் கலக்கமடைந்துள்ளனர். நோயாளிகள் மற்றும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர். அப்போதும் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’, என்றார்.
மேலும் ஆர்ஜி. கரில் நிறுத்தப்பட்டுள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு வசதிகளை வழங்குவதில் மேற்கு வங்க அரசு ஒத்துழைக்கவில்லை என்று இந்த மாத தொடக்கத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியதை அவர் நிராகரித்தார்.
நாங்கள் அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தோம், வேறு என்ன செய்ய முடியும்? அவர்களுக்கு ஆடைகளை கொடுக்க முடியாது. மத்திய அரசும், சில இடதுசாரிக் கட்சிகளும் சதி செய்கின்றன, என்று பானர்ஜி குற்றம் சாட்டினார்.
ஆதாரங்களை சேதப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.
ஆகஸ்ட் 12 அன்று கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பெற்றோருடன் அவர் சந்தித்ததைக் குறிப்பிடுகையில்: ’தங்கள் மகளின் நினைவைப் போற்றும் எண்ணம் இருந்தால், எங்கள் அரசாங்கம் அவர்களுக்குத் துணை நிற்கும் என்று நான் பெற்றோரிடம் கூறினேன். இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும, என்று எனக்குத் தெரியும்’, என்றார்.
நிர்வாக ஆய்வுக் கூட்டத்தின் போது, அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை சீரமைக்கும் நோக்கில் முதல்வர் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
வரும் வியாழக்கிழமை அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தவும், மேலும் தனியார் மருத்துவமனைகளில் பயிற்சி பெறும் மூத்த மருத்துவர்களின் பட்டியலைத் தயாரிக்கவும் சுகாதார செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகாமுக்கு பானர்ஜி திங்கள்கிழமை அறிவுறுத்தினார்.
அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் நோயாளி நலக் குழுக்களின் (ரோகி கல்யாண் சமிதி) தலைவர்களில் இருந்து அரசியல்வாதிகள் நீக்கப்பட வேண்டும். மருத்துவமனைகளின் முதல்வர்கள் அல்லது கண்காணிப்பாளர்களை ரோகி கல்யாண் சமிதிகளின் தலைவர்களாக நியமிக்கவும், அவர் கூட்டத்தில் சுகாதார செயலாளரிடம் கூறினார்.
தற்போது அனைத்து ரோகி கல்யாண் சமிதிகளின் தலைவர்களும் எம்எல்ஏக்கள் தான்.
மருத்துவமனை பாதுகாப்பு குறித்து பேசிய முதல்வர், “போலீசார் அவுட்போஸ்ட்களில் இருப்பார்கள், ஆனால் மொத்தப் பாதுகாப்பு (மருத்துவமனைகளின்) தனியார் பாதுகாப்புடன் நிர்வகிக்கப்பட வேண்டும்… அவர்கள் பணியின் போது ஏதேனும் தவறான செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்,” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/kolkata-doctor-rape-murder-case-police-commissioner-resegnation-mamta-banerjee-7058006