source https://tamil.indianexpress.com/india/prohibitory-orders-imposed-in-three-manipur-districts-following-student-protests-tamil-news-7058303
Manipur Violence: மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கடந்த ஆண்டு மே மாதம், கூகி - மெய்டி பிரிவினரிடையே இனக் கலவரம் வெடித்தது. இதில், 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளால், மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது.
இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. கடந்த முறை போலல்லாமல் தற்போது ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதமேந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
தடை உத்தரவு
இதனால், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 7 ஆம் தேதி நடந்த வன்முறை சம்பவங்களில், 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இம்பால் பள்ளத்தாக்கில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, மணிப்பூரின் மூன்று மாவட்டங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே வருவதைத் தடுக்கும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு, இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் பிஎன்எஸ்எஸ் பிரிவு 163 (2) இன் கீழ் தடை உத்தரவுகள் தௌபாலில் விதிக்கப்பட்டன.
"மாவட்டத்தில் வளர்ந்து வரும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை காரணமாக, செப்டம்பர் 10 ஆம் தேதி காலை 11 மணி முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்துவதற்கான முந்தைய உத்தரவுகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, அடுத்த உத்தரவு வரும் வரை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு உள்ளது" என்று மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்பால் மேற்கு மாவட்ட மாஜிஸ்திரேட் பிறப்பித்த மற்றொரு உத்தரவில், "முந்தைய அனைத்து உத்தரவுகளையும் மீறி, செப்டம்பர் 10 ஆம் தேதிக்கான ஊரடங்கு உத்தரவு தளர்வு காலம் இதன் மூலம் இன்று காலை 11 மணி முதல் நீக்கப்படுகிறது.அந்தந்த குடியிருப்புகளுக்கு வெளியே மக்கள் நடமாடுவதற்கான கட்டுப்பாடு கடந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் நீக்கப்பட்டது,” என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, செப்டம்பர் 10 ஆம் தேதிக்கான ஊரடங்கு தளர்வு காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நீக்கப்பட்டது. ஆனால் சமீபத்திய உத்தரவுடன் அது மாற்றப்பட்டு இருக்கிறது. எவ்வாறாயினும் ஊடகங்கள், மின்சாரம், நீதிமன்றம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு ஊரடங்குச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ட்ரோன்கள் மற்றும் ராக்கெட் வாயிலாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவர்னர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மணிப்பூர் மாணவர் அமைப்பினர் நேற்று திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முதல்வர் பைரேன் சிங் மற்றும் கவர்னர் ஆச்சார்யாவை சந்தித்து பேசிய அவர்கள், மாநிலம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தனர்.
“நாங்கள் முன்வைத்த 6 கோரிக்கைகளுக்கு ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா பதிலளிக்க 24 மணி நேர கெடு விதித்துள்ளோம். காலக்கெடு முடிந்ததும் எங்களது எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்” என்று மாணவர் தலைவர் சி.விக்டர் சிங் இன்று செவ்வாய்கிழமை காலை செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யாவைச் சந்தித்த மாணவர் பிரதிநிதிகள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறப்படும் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) மற்றும் மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வைத்துள்ளோம். தற்போது முன்னாள் சிஆர்பிஎஃப் டிஜி குல்தீப் சிங் தலைமையிலான ஒருங்கிணைந்த கட்டளை மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளோம் எனக் கூறினர்.
“திங்கள்கிழமை போராட்டமானது மாநிலத்தில் நீடித்து வரும் நெருக்கடியின் மீது மாணவர் சமூகத்தின் கோபத்தின் வெளிப்பாடாகும். மாநிலத்தின் பிராந்திய மற்றும் நிர்வாக ஒருமைப்பாட்டை மாற்றாமல் விரைவில் அமைதி மற்றும் தீர்வை நாங்கள் விரும்புகிறோம், ”என்று போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு மாணவர் கூறினார்.