புதன், 4 செப்டம்பர், 2024

கோவையில் மூன்று மாவட்ட வேளாண்மை குறித்து ஆய்வு: அமைச்சர்கள் பங்கேற்பு!

 Minister Panneerselvam

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தொடர்ந்து விவசாயம், மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.  அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறுகையில்,3 மாவட்டங்களை சார்ந்த வேளாண் மற்றும் உழவர் நலன் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றதாகவும், இந்த ஆய்வுக் கூட்டத்தில்  மூன்று மாவட்டங்களில்  வேளாண்மை மேம்படுத்துதல்,  விவசாயிகளை ஊக்கப்படுத்துதல், ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்தில் உழவிடும் உணவை உற்பத்தி செய்கின்ற பொழுது உடல் நலத்தை பாதுகாக்கின்ற வகையில் இருக்க வேண்டும் என அதிகாரிகள் விவசாயிகளுக்கு வழி காட்ட வேண்டும். நிர்ணயித்த இலக்கை விட அதிகமாக உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தென்னை வாடல் நோயைப் பொறுத்தவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிரமாக இருந்தது. அப்போது நேரடியாக சென்று பொள்ளாச்சியில் இது குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி பாதிப்புக்குள்ளான பகுதிகளை கண்டறிந்து வேளாண்துறை மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நிவாரணமும் முதலமைச்சரால் வழங்கப்பட்டது. 22 கோடி மதிப்பீட்டில் தென்னை வாடல் நோயாய் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

யானை வழித்தடத்தில் உள்ள கல்லாறு பழ பண்ணை எடுக்கப்படுவது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், நீதிமன்றத்தால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசும் அதற்குரிய நடவடிக்கையை சட்டரீதியாக எடுத்து வருவதாகவும் கொப்பரை தேங்காய் பணியை தீவர படுத்திருப்பதாக தெரிவித்த அமைச்சர் இது சம்பந்தமாக ஒன்றிய அரசுக்கும் நெருக்கடி தந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த நான்காண்டுகளில் நெல் ஊக்கத்தொகையாக 985 கோடி ரூபாய், இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 945 கோடி ரூபாய் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து கிராம வேளாண் திட்டத்தின் கீழ் 46 லட்சம் இலவச தென்னங்கன்றுகள் மரக்கன்றுகள் வழங்ககப்பட்டுள்ளது. வனவிலங்குகளால் ஏற்படும் அதிகப்படியான விவசாய பொருட்கள் இழப்பீடுகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, உட்பட  துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-minister-mrk-panneer-selvam-and-munusamy-in-coimbatore-function-6947560