#WaqfAmendmentBill க்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு AIMIM கட்சித் தலைவர் அசாதுத்தீன் ஒவைஸி அழைப்பு விடுத்துள்ளார். 2 9 24
சுதந்திரத்திற்கு முன்பு இருந்தே முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்களது நிலங்கள் மற்றும் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த சொத்துகள் ஆகியவற்றுக்கு இறைவனுக்கு தானமாக வழங்கினர். இத்தகைய சொத்துகள் ‘வக்ஃப் சொத்துகள்’ என குறிப்பிடப்பட்டு அவை பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.
இவற்றில் இருந்து கிடைக்கும் வருமானத்தை கொண்டு, முஸ்லிம்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளிவாசல் மற்றும் ஆன்மீக தலங்கள், தர்காக்கள் பராமரிப்பு, கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கும் செலவிடப்பட்டு வருகிறது.
இந்த சொத்துகளை பராமரிக்க 1954-ம் ஆண்டு வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாநில அரசுகளால் மாநில வக்ஃப் வாரியங்கள் நிறுவப்பட்டன. இந்த அமைப்புகள் வக்ஃப் சொத்துகளை நிர்வகித்து வருகின்றன. இதன்கீழ் மாவட்ட வக்ஃப் குழுக்கள் செயல்படுகின்றன.
இதற்கிடையே, வக்ஃப் சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் வல்லுநர்கள், பெண்கள், ஷியா மற்றும் போராஸ் உள்ளிட்ட சில பிரிவினர் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. வக்ஃப் சட்டத்தில் 40 திருத்தங்களை செய்வதற்கு மத்திய அமைச்சரவை கடந்த 2-ம் தேதி ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டு குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. மேலும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா பற்றி முஸ்லிம்களிடம் கருத்து கேட்க பாஜ சிறுபான்மையினர் பிரிவு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்து கருத்துகளை கேட்டு, நாடாளுமன்ற கூட்டு குழுவிடம் தெரிவிக்க உள்ளனர்.
இந்த நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் நடத்த ஆல் இந்தியா மஜ்லிஸே இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் தொகுதி எம்பியுமான அசாதுத்தீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார்.
source https://news7tamil.live/nationwide-protest-against-waqfbillamendment-asaduddin-owaisi-calls.html