செவ்வாய், 3 செப்டம்பர், 2024

புல் புல் பறவை காப்பாற்றிய கதை தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை”

 

2 9 24

மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. அண்மையில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட உயர்கல்வி நிலையங்களின் தரவரிசை பட்டியலில், முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டிலிருந்து 22 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. குறிப்பாக, இந்தியாவிலேயே முதல் மாநில பல்கலைக்கழகம் என்ற பெருமையை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. இதனால் தான் மத்திய அரசின் குலக்கல்வியை போதிக்கும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. மேலும் இருமொழி கொள்கையிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இதற்கிடையே, மத்திய அரசு கல்விக்கு தரவேண்டிய நிதியை கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. தற்போது ஆளுநரை வைத்து மாநில அரசின் பாடத்திட்டத்தை விமர்சிக்க தொடங்கி இருக்கிறது.

இதையும் படியுங்கள் : Paralympics2024 – வட்டு எறிதலில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா!

தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி, “தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது, மாநில பாடத்திட்டங்கள் தரம் மோசமாக உள்ளது” என பேசியுள்ளார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கண்டித்துள்ளனர். மேலும் கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியதாவது :

”மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர். என். ரவி கூறியுள்ளார். சாவர்க்கரை புல் புல் பறவை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை. தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டு”

இவ்வாறு ஆளுநரின் பேச்சுக்கு சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/the-story-of-the-grass-bird-saving-savarkar-is-not-in-tamilnadu-subjects-suvenkatesan-condemns-governor-rn-ravis-speech.html