செவ்வாய், 3 செப்டம்பர், 2024

சிறுபான்மை மொழி மாணவர்களும் தமிழ் பாடத் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும்; தேர்வுத் துறை உத்தரவு

 

exam dpi

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வெழுதும் சிறுபான்மை மொழி மாணவர்களும் தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாக எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் 13 வகையான விவரங்களை சரிபார்க்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு தமிழ் பாடத் தேர்வில் இருந்து கடந்தாண்டு விலக்கு அளிக்கப்பட்டது. இந்தநிலையில், தெலுங்கு, கன்னடம், உருது, மலையாளம் ஆகிய மொழிகளை தாய் மொழியாக கொண்ட மாணவர்களும், இந்தாண்டு தமிழ் பாடத்தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தமிழை தாய்மொழியாக கொண்டிராத 10 ஆம் வகுப்பு சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து கடந்த ஆண்டு விலக்கு அளிக்கப்பட மாட்டாது என தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் தமிழ் மொழி கட்டாயம் என்ற நடைமுறை உள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் பொருந்தும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் தான் சிறுபான்மை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்க வேண்டும். மாறாக அவரவர் தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழை கட்டாய பாடமாக்குவதில் இருந்து ஓராண்டு விலக்கு அளித்து இருந்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

ஆனால் இன்று (செப்டம்பர் 2) தேர்வுத்துறை இதுதொடர்பாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், சிறுபான்மை மொழி மாணவர்களும் தமிழ் தேர்வு கட்டாயமாக எழுத வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்தை கட்டாயமாக எழுத வேண்டும் என்றும் கூறியுள்ளது.

source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-directorate-of-examination-confirms-tamil-language-paper-must-to-class-10-students-including-minorities-languages-6944192