திங்கள், 2 செப்டம்பர், 2024

திண்டிவனம் : கல்விக்கூடங்களில் சமத்துவம் : மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

 

sasa

நீதிபதி கே. சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவின் அறிக்கையைத் தமிழாக்கம் செய்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரி நூலகங்களுக்குத் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என இன்று திண்டிவனத்தில் நடந்த ‘கல்விக்கூடங்களில் சமத்துவம் -  மாநாட்டில்’ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

கல்விக் கூடங்களில் சாதிய பாகுபாடுகளைக் களைவது தொடர்பாகத் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி கே. சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளைத் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இம் மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது. அவ்வாறு நடைமுறைப்படுத்தும் போது ‘மையப்படுத்தப்பட்ட உணவுக்கூடங்கள்; ஆரம்பக் கல்வி முழுவதையும் உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்தல்’ ஆகிய பரிந்துரைகள் தொடர்பாக வல்லுநர்களைக் கலந்து ஆலோசிக்க வேண்டும் 

 நீதிபதி கே. சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவின் அறிக்கையைத் தமிழாக்கம் செய்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரி நூலகங்களுக்குத் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். அத்துடன் ஆசிரியர்களும், மாணவர்களும் இந்த அறிக்கையைப் பெற்றுப் பயனடையும் விதமாகக் குறைந்த விலையில் விற்பனைக்கும் தர வேண்டும் என இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரி ஆசிரியர் அமைப்புகள் இந்த அறிக்கையைப் பரவலாக மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும். மாணவர் அமைப்புகள் இந்த அறிக்கையை மாணவர்களிடையே எடுத்துச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு மாணவர் அமைப்புகளை அந்தந்த அரசியல் கட்சிகள் அறிவுறுத்த வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

 நீதிபதி கே. சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவின் அறிக்கை குறித்துத் தமிழ்நாடு பட்டியல் இனத்தவர் பழங்குடியினர் ஆணையம் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்க வேண்டும். இந்த அறிக்கை தொடர்பான விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்த வேண்டும் என இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

 மேல்நிலைக் கல்வியில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் இரு பருவத் தேர்வுகள் ( செமஸ்டர் ) நடத்தப்பட வேண்டும். அந்தத் தேர்வுகளில் மாணவர்கள் பெரும் மதிப்பெண்கள் உயர்கல்வி சேர்க்கை மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகளில் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். அதற்கு ஏற்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

 

நீதிபதி கே. சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு அறிக்கையில் சமூக நீதி மாணவர் படை துவக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அது போலவே சமூக நீதி ஆசிரியர் பேரவை தொடங்கப்பட வேண்டும் அதற்குரிய நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

 “தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமாக இந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்ற பி எம் ஸ்ரீ பள்ளிகளைத் தமிழ்நாட்டில் துவக்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும், அவ்வாறு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் சமாக்ரா சிக்ஷா திட்டத்துக்கான நிதியைத் தர மாட்டோம்” என இந்திய ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் நிபந்தனை விதித்துள்ளது. இதனால் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. ஒன்றிய அரசின் இந்த அச்சுறுத்தல் அரசியலை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களுக்கு விடுவிக்கப்படாமல் இருக்கும் சமாக்ரா சிக்ஷா திட்டத்துக்கான நிதியை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது. ஒன்றிய அரசின் நெருக்குதலுக்குத் தமிழ்நாடு அரசு பணியக் கூடாது இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

 பள்ளிக்கல்வித்துறையில் நீண்ட நாட்களாகப் பணியாற்றிவரும் தற்காலிக ஆசிரியர்கள் அனைவரையும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஊறு நேராமல் நிரந்தரமாகப் பணியமர்த்தம் செய்ய வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளைப் பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது

source https://tamil.indianexpress.com/tamilnadu/tindivanam-judge-chandru-resolution-brief-in-tamil-6941671