செவ்வாய், 10 செப்டம்பர், 2024

இந்திய கல்வி அமைப்பை கைப்பற்றிவிட்டது!” – அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு!

 

நாட்டின் கல்வி அமைப்பை ஆர்எஸ்எஸ் கைப்பற்றி தனது கருத்தியலை புகுத்தி வருகிறது என அமெரிக்காவில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே ராகுல் காந்தி பேசினார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய – அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்த அங்குள்ள மக்களிடம் அவர் உரையாடல் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் டெக்சாஸில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே ராகுல் காந்தி பேசியதாவது:

பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். அவர்கள் உணவு சமைத்துக் கொண்டும், அதிகம் பேசாமலும் இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் விரும்புகின்றன. ஆனால் நாங்கள் விரும்பியதை பெண்கள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியா என்பது ஒரே சிந்தனை என்று ஆர்எஸ்எஸ் நம்புகிறது. ஆனால் இந்தியா என்பது பல்வேறு சிந்தனைகளின் தொகுப்பு என்று நாங்கள் நம்புகிறோம். நாட்டின் கல்வி அமைப்பை ஆர்எஸ்எஸ் கைப்பற்றி தனது கருத்தியலை புகுத்தி வருகிறது.

அமெரிக்காவைப் போலவே, இந்தியாவிலும் அனைவரும் அனைத்திலும் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும். எல்லோரும் கனவு காண அனுமதிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் அவர்களின் சாதி, மொழி, மதம், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இடம் கொடுக்கப்பட வேண்டும்.

எங்கள் அரசியல் அமைப்புகளிலும், கட்சிகளிலும் இல்லாதது அன்பு, மரியாதை மற்றும் பணிவு என்று நான் நினைக்கிறேன். இந்திய அரசியலில் கட்சிகளிடையே அன்பு, மரியாதை மற்றும் பணிவு என்பது இல்லை. ஒரு சமூகம், ஒரு சாதி, ஒரு மதம், ஒரு மாநிலம், ஒரு இனம் என பாகுபாடு காட்டாமல் அனைத்து மனிதரையும் நேசியுங்கள். சக்திவாய்ந்த, அதிகாரம் படைத்தவர்கள் மட்டுமின்றி இந்தியாவைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் அனைவருக்கும் மரியாதை செய்யுங்கள்.

 அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதான பிரதமர் நரேந்திர மோடியின் தாக்குதல்களை இந்திய மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். சமீபத்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அதனை நிரூபித்துள்ளன. இந்தியாவில் இந்த முறை பிரதமரை கண்டும், பாரதீய ஜனதா கட்சியை கண்டும் மக்கள் அஞ்சவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் தெளிவாக்கி இருக்கின்றன. அரசியல் அமைப்பு சட்டம், மதம் மற்றும் மாநிலங்கள் மீதான தாக்குதல்களை இனியும் ஏற்கப்போவதில்லை என்பதை உணர்த்த இந்திய மக்களின் மகத்தான சாதனைகள்தான் இவை.

9 9 24


source https://news7tamil.live/rss-is-inculcating-its-ideology-in-the-education-system-rahul-gandhi-speech-in-america.html