ஆட்சியில் பங்கு வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் கேட்டிருந்தால், தி.மு.க கொடுத்திருக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். அப்போது விஜய்யின் அரசியல் பிரவேசம், ஆட்சியில் பங்கு உள்ளிட்ட பலவற்றுக்கு அவர் பதிலளித்தார்.
குறிப்பாக, "இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. யார் சலனத்தோடு இருக்கிறார்களோ அவர்களுக்கு சலசலப்பை ஏற்படுத்தலாம். நாங்கள் உறுதியாக இருக்கிறோம். விஜய்யின் அரசியல் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இந்தியா கூட்டணி மேலும் வலுப்பெறவே விஜய்யின் அரசியல் பிரவேசம் உதவும்.
த.வெ.க மாநாடு, விஜய்யின் பேச்சால் இந்தியா கூட்டணியில் எந்த சலனமும் இல்லை. விஜய்க்கு மட்டுமா கூட்டம் கூடியது? ராகுல் காந்தி வந்தபோது அதிக கூட்டம் கூடியது. கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டியது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை. அவர்கள் தான் முடிவெடுப்பார்கள். 2006-ல் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அன்றைக்கு தமிழக முதல்வராக கருணாநிதி இருக்க வேண்டும் என நிபந்தனை இன்றி ஆதரவு கொடுத்தார் சோனியா காந்தி. அன்றைக்கு ஒருவேளை எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்டிருந்தால் திமுக கொடுத்திருக்கும்" என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
மேலும், ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் தான் விஜய் கட்சி தொடங்கியதாக ஒரு பேச்சு உள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "இதை அவரிடம் தான் கேட்க வேண்டும். யார் சொல்லி நீங்கள் கட்சி ஆரம்பித்தீர்கள்?" என விஜய்யிடம் கேளுங்கள்" என்று பதிலளித்தார்.
முன்னதாக, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் கூறிய கருத்து தனக்கு பிடித்திருந்ததாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/selvaperunthagai-about-dmk-and-vijay-political-entry-7377672