/indian-express-tamil/media/media_files/2025/11/06/larisa-neri-2025-11-06-13-05-32.jpg)
ராகுல் காந்தி ஹரியானா வாக்காளர் பட்டியலில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் லாரிசா நேரி புகைப்படத்தைக் காட்டுகிறார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை, ஹரியானாவில் வாக்காளர் மோசடி செய்ய ஒரு பிரேசில் மாடல் ஒருவரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். அந்தப் பெண்ணின் புகைப்படம் ஒரு மைய சர்வரில் இருந்து பதிவேற்றப்பட்டு, ஹரியானாவில் உள்ள 10 வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் 22 முறை வாக்களிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். அதன் பிறகு, சமூக ஊடகங்கள் அந்தப் பெண்ணின் அடையாளத்தைக் கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டன.
அந்தப் ‘மாடல்’ லாரிசா நேரி என்று அடையாளம் காணப்பட்டார். இவர் பிரேசிலின் தென்கிழக்கு மினாஸ் ஜெரைஸைச் சேர்ந்த ஒரு சிகை அலங்கார நிபுணர் ஆவார். இவர் மினாஸ் ஜெரைஸின் தலைநகரான பெலோ ஹொரிஸோண்டில் ஒரு சலூன் நடத்தி வருகிறார்.
ஹரியானாவின் வாக்காளர் பட்டியலில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் லாரிசா நேரியின் படம், ஒரு ஆன்லைன் புகைப்பட களஞ்சியத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்தப் படம் சமூக ஊடகங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் 2017-ம் ஆண்டு, புகைப்படக்காரர் மேதியூஸ் ஃபெரெரோ ஒரு திட்டத்தின்போது எடுத்தது. இந்தப் புகைப்படம் பல இணையதளங்களில் கிடைத்தது, ஆனால் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்குப் பிறகு, அன்ஸ்பிளாஷ் (Unsplash) நிறுவனம் லாரிசா நேரியின் புகைப்படத்தை நீக்கியுள்ளது.
பிரேசிலிய உண்மைச் சரிபார்ப்பு செய்தி நிறுவனமான ஆஸ் ஃபாடஸ் (Aos Fatos), லாரிசா நேரியுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறியது. ஹரியானா தேர்தலில் தனது புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் மறுத்துள்ளார். மேலும், “நான் ஒரு மாடல் அல்ல, அப்போது ஒரு நண்பருக்கு உதவ மட்டுமே போஸ் கொடுத்தேன்” என்றும் அவர் கூறினார்.
லாரிசா நேரியின் பதில்
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு வைரலான சிறிது நேரத்திலேயே, நேரி பேசிய ஒரு வீடியோ வெளியானது. அதில் அந்தப் பெண்மணி இந்தியாவுடன் தனக்கு எந்தத் தனிப்பட்ட தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார். இது ஒரு "நகைச்சுவை" என்று அவர் கூறினார்.
போர்த்துக்கீசிய மொழியில் பேசிய அவர், “நண்பர்களே நான் இப்போது ஒரு ஜோஜ் சொல்லப் போகிறேன். இது மிகவும் கொடூரமானது. என்னுடைய பழைய புகைப்படத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எனக்கு 18-20 வயது இருந்திருக்கும்... இந்தியாவில் வாக்களிக்க என் படத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள், இது ஒரு தேர்தலா, இந்தியாவில் வாக்களிப்பது பற்றிய ஏதோ ஒன்றா என்று எனக்குத் தெரியவில்லை! ஒருவருக்கொருவர் சண்டையிட என்னை இந்தியராக சித்தரிக்கிறார்கள். எவ்வளவு ஒரு பைத்தியக்காரத் தனம் பாருங்கள். ஒரு நிருபர் என்னுடைய பணியிடத்துக்கே தொடர்புகொண்டு இந்திய தேர்தலில் அவர் பங்கேற்பது குறித்து கருத்து கேட்க இன்ஸ்டாகிராமிலும் அவர் என்னைத் தொடர்பு கொண்டார். ஒரு நண்பர் வைரலான இந்த விஷயத்தைக் குறித்து ஒரு பதிவை எனக்கு அனுப்பி வைத்தார்.” என்று லாரிசா நேரி கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/international/who-is-larissa-nery-brazilian-model-claimed-to-be-featuring-on-haryana-voter-lists-10627070





