வெள்ளி, 7 நவம்பர், 2025

ரோடு ஷோ’-வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

 

all party meeting sop 2

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், 5 ஆயிரம் பேருக்கு மேலான மக்கள் கூடும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அரசியல் பரப்புரைகள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான புதிய செயல்பாட்டு வழிகாட்டு நெறிமுறை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் அவர்கள் இந்த புதிய செயல்பாட்டு வழிகாட்டு நெறிமுறையின் அவசியம் குறித்து தனது விரிவான கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

அரசியல் கட்சிகள் சில சமயங்களில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதைச் சுட்டிக்காட்டி, சமீபத்தில் நடந்த கரூர் சம்பவத்தை உதாரணமாகக் கொண்டு, இந்தச் செயல்பாட்டு வழிகாட்டு நெறிமுறை கட்டாயம் தேவை என பாலச்சந்திரன் வலியுறுத்தினார். ஒவ்வொரு 50 பேருக்கும் ஒரு காவலர் வீதம் நியமிப்பது குறித்து பேசப்பட்டுள்ளது. அதே சமயம், கூட்டத்தின் நேரம், எதிர்பார்க்கப்படும் மக்கள் எண்ணிக்கை ஆகியவற்றை முன்கூட்டியே தெரிவிக்கும் பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கே உண்டு. சாலைகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்றும், பொது மைதானங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒரு அரசியல் கட்சி ஒப்புதல் அளித்தாலும், சட்டம்-ஒழுங்கு நிலைமைகளை கருத்தில் கொண்டு, இறுதி முடிவு எடுக்கும் அதிகாரமும், தேவைப்பட்டால் முடிவுகளை ஓவர்ரோல் செய்யும் அதிகாரமும் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) மற்றும் எஸ்பி-க்கே (காவல்துறை கண்காணிப்பாளர்) வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் வரும் மக்களைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பேசிய அவர், எந்த அரசியல் கட்சி கூட்டம் நடத்துகிறதோ, அந்தக் கட்சியின் தொண்டர்கள்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முதல் குழுவாக இருக்க வேண்டும் என்றும், காவல்துறை இரண்டாம் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முந்தைய காலங்களில் இதுதான் நடைமுறையில் இருந்ததாகவும், கரூர் போன்ற சம்பவங்களால் இந்த நடைமுறை இப்போது முறையாகக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்னதாகவே ஜாமீன் தொகையை டெபாசிட் செய்யும் நடைமுறையை அவர் வரவேற்றார். இது அரசியல் கட்சிகளின் பொறுப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/political-rally-sop-new-guidelines-for-political-meetings-former-ias-balachandran-10627382