ஞாயிறு, 13 டிசம்பர், 2015

சிம்பு

 பாட்டை விட ஆபாசமா இருக்கு நீங்க கொடுத்திருக்கிற பேட்டி. உங்க பெட்ரூமுக்குள்ளேயும் பாத்ரூமுக்குள்ளேயும் நீங்க என்ன வேணா பண்ணிட்டுப் போங்க. யாரும் எட்டிப்பார்க்க மாட்டாங்க. அப்படி எட்டிப்பார்த்துட்டு அந்தக் கண்றாவியை மறக்க முடியாம காலம்பூராவும் அருவருப்பு உளைச்சலோட இருக்கிறதுக்கு யார் ரிஸ்க் எடுக்கப்போறாங்க?
ஆனா, மத்தவங்க பார்க்கட்டும்கிறதுக்காகவே வேணும்னே பெட்ரூம், பாத்ரூம் கதவைத் திறந்துவைக்கிறது மாதிரியில்ல அந்த ‘பீப்’ பாட்டை வைரலாக்கியிருக்கீங்க. அதை நீங்க வெளியிடலைன்னு நீங்க சொல்றதை நம்பறதா இருந்தாலும், அது வைரலாகும்னு தெரிஞ்சு, வாட்ஸ்ஆப்பில் போடுற கைகளுக்குக் கிடைக்க வெச்சதுக்கு யார் பொறுப்பு? பேட்டியிலே அந்தப் பாட்டை நீங்க அதிகாரப்பூர்வமா வெளியிடலைன்னு சொல்லியிருக்கீங்க. அப்படின்னா அதிகாரப்பூர்வமில்லாத முறையிலே வெளியிட்டதா எடுத்துக்கலாமா?
உங்களுக்குத் தெரியாம திருட்டுத்தனமா வெளியாகியிருச்சுன்னு ஒரு பேச்சுக்கு வெச்சிக்கிட்டாலும், பேட்டியிலே ஒரு வார்த்தை கூட வருத்தம் தெரிவிக்காதது, பாட்டில் ஒலி மறைக்கப்பட்ட வார்த்தைகளுக்கு பதிலாக ‘பீப்’ சவுண்டு வைச்சதும், அது என்ன வார்த்தையாக இருக்கும்னு யார் வேணும்னாலும் ஊகிக்கிற மாதிரி செஞ்சதும் ஒத்திகை பார்த்து நடத்தப்பட்டதுதான்னு காட்டுது. அதை நியாயப்படுத்தினதன் மூலம் உங்க மூளையில் ‘பீப்’ சவுண்டுதான் இருக்குதுன்னும் நீங்களே காட்டிக்கொடுத்துட்டீங்க.
“யார் மனதையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல, அப்படி புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று சிலர் சொல்வார்கள், அப்படிக்கூட நீங்க சொல்லத் தயாராகயில்லை. இளைஞர்களிடையே, பெண்களின் உடலுறுப்புகள் குறித்த வக்கிர உணர்வுகளைக் கிளறிவிட்டே “புகழோடு” இருக்கிற மலிவான உத்தியாகத்தான் உங்க தயாரிப்பு இருக்கு. சமத்துவ உரிமைகளுக்காகப் போராடும் பெண்களை மீண்டும் மீண்டும் பாலியல் சரக்குகளாக அடுக்கிவைக்கிற வன்மம்தான் உங்க பாட்டு. தட்டுத்தடுமாறி முன்னேறத் துடிக்கிற சமூகத்தை எப்படியாவது பின்னுக்கு இழுகிற வேலையை நிறையப்பேரு சாதி, மதம்கிற பேருல செஞ்சுக்கிட்டு இருக்காங்க. அதுல உங்க வைரல் பாட்டும் சேர்ந்துக்கிடுது.
முன்பு ஏதோ ‘அன்பைப் பரிமாறுங்கள்’னு ஒரு பாட்டு பாடி வெளியிட்டதாவும், அதை யாரும் கண்டுக்கிடலையேன்னும் சொல்லியிருக்கீங்க. வைரலாகப் வரவுகிற அளவுக்கு அந்தப் பாட்டை நீங்க பாடலைங்கிறதுதான் காரணம். அன்பைப் பரிமாறச் சொல்லிட்டு இப்ப கழிவைக் கொட்டினீங்கன்னா என்ன பிரயோசனம்?
கலைஞர்களின் வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கிறவங்க இது மாதிரியான காரியங்களால மனச்சங்கடத்திற்கு ஆளாகுறாங்க. ஆனாலும் நாங்க கருத்து வெளிப்பாட்டு உரிமையை உயர்த்திப் பிடிப்போம், அந்த உரிமையை இப்படி சமூக அக்கறையில்லாமல் மட்டரகமான முறையில் மிஸ்யூஸ் பண்றதையும் வன்மையாகக் கண்டிப்போம்.