புதன், 1 பிப்ரவரி, 2017

ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பணபரிமாற்றத்துக்கு தடை

ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பணபரிமாற்றத்துக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பணபரிமாற்றம் செய்ய ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்தார். கருப்பு பண ஒழிப்புக்காக உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்புக் குழுவின் பரிந்துரைப்படி, இந்த முடிவினை அரசு எடுத்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
கருப்புப் பணம் ஒழிப்பு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு தனது 5ஆவது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்தது. அதில், நாட்டில் உள்ள பெரும்பான்மையான கருப்புப் பணம் ரொக்கமாகப் பதுக்கப்பட்டுள்ளதால், ரூ.3 லட்சத்துக்கும் மேலான தொகையில் ரொக்க பணபரிமாற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. இதற்காக சட்டம் இயற்றவும் அந்த குழுவினர் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.