வெள்ளி, 9 ஏப்ரல், 2021

டூவீலரில் வாக்குப்பதிவு எந்திரம் கடத்தலா? சென்னையில் சிக்கிய 2 பேரிடம் விசாரணை

 சென்னையை அடுத்த வேளச்சேரியில் வாக்கு எந்திரங்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை கண்ட பொதுமக்கள், அவர்களை காவல்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.

சென்னை மாநகராட்சியை சேர்ந்த மூன்று பணியாளர்கள் வாக்கு எந்திரங்களை, வேளச்சேரியிலிருந்து தரமணி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வாக்கு எந்திரங்களை கொண்டு செல்கிறார்கள் என தகவல் அறிந்த, அப்பகுதி மக்களும் திமுக வினரும் அவர்களை சிறைப் பிடித்தனர். பின், போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவம் நடத்த இடத்திற்கு காவல் துறையினர் வருவதற்குள், இருசக்கர வாகனத்தில் எப்படி வாக்கு எந்திரம் வந்தது என, தேர்தல் ஆணையத்தின் மேல் சந்தேக கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பின், காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்ததோடு, சம்பவம் குறித்து மாநகராட்சி பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், கைப்பற்றப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம், தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்குப்பதிவான எந்திரங்கள் தான் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டதாக தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்ததோடு, குறிப்பிட்ட 92-வது வாக்குச்சாவடி மையத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்தியப் பின், செய்தியாளர்களிடம் பேசிய வாக்குச்சாவடியின் தேர்தல் அலுவலர், வாகனத்தில் கொண்டுச் செல்லப்பட்டது பழுதடைந்த வாக்கு எந்திரங்கள் என கூறினார். பின், இச்சம்பவம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் உரிய முடிவெடுப்பார் என தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/velacherry-men-arrested-being-caught-tampering-evms-chennai-289540/

Related Posts: