மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் நான்காவது கட்ட வாக்குப்பதிவுக்கு மறு நால் நடந்த வன்முறையைத் தொடர்ந்து ஒரு நாள் கழித்து, 5 பேர் உயிரிழந்தனர். இதில் 4 பேர் மத்தியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மே.வ முதல்வர் மம்தா பானர்ஜி இது கூச் பெஹர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியை நிர்வகிக்கும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையால் நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலை என்று கூறினார்.
சிலிகுரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “இது ஒரு இனப்படுகொலைதானே தவிர வேறில்லை. மக்கள் மார்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கும்பலைக் கலைப்பதுதான் அவர்களின் நோக்கம் என்றால், அவர்கள் மக்களின் கால்களுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம்” என்று கூறினார்.
சனிக்கிழமை அன்று சிதல்குச்சி தொகுதியில் வாக்குச்சாவடி 126-ல் பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
சிதல்குச்சிக்கு அரசியல்வாதிகள் யாரும் 72 மணி நேரத்துக்கு வரக்கூடாது என்ற உத்தரவு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை கண்டித்த மம்தா பானர்ஜி, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பதைத் தடுப்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று சாடினார்.
இருப்பினும், இறந்தவர்களின் உறவினர்களுடன் முதல்வர் மம்தா பானர்ஜி வீடியோ கான்ஃப்ரன்ஸிங் வழியாக பார்த்து பேசியபோது அவர் செய்தியாளர் கூட்டத்தில் பேசினார். “என்னைத் தடுப்பதற்காக தேர்தல் அமைப்பு இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிப்பது துரதிர்ஷ்டவசமானது. இருப்பினும், 72 மணி நேர தடை முடிந்த பிறகு, நான் நிச்சயமாக அங்கே செல்வேன். எனது தேர்தல் நிதியில் இருந்து பணத்தைப் எடுத்து அந்த குடும்பங்களுக்கு முடிந்தவரை உதவுவேன்.” என்று கூறினார்.
திரிணாமுல் கங்கிரஸ் தலைவர் சனிக்கிழமையன்று தேர்தல் ஆணையத்தை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதியை மோடி நடத்தை விதி என மறுபெயரிட வேண்டும்! பாஜக தனது எல்லா சக்தியையும் பயன்படுத்த முடியும். ஆனால், இந்த உலகில் எதுவும் என் மக்களுடன் இருப்பதையும் அவர்களின் வலியைப் பகிர்ந்து கொள்வதையும் தடுக்க முடியாது. கூச் பெஹரில் உள்ள எனது சகோதர சகோதரிகளை 3 நாட்கள் சந்திப்பதை அவர்கள் கட்டுப்படுத்தலாம். ஆனால், நான் 4வது நாளில் அங்கே இருப்பேன்! ” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/election/mamata-banerjee-accuses-cisf-for-killing-of-four-people-in-cooch-behar-calls-it-genocide-290836/