வியாழன், 1 ஏப்ரல், 2021

கொரோனா: தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்க ஆட்சியர்களுக்கு அனுமதி

 தமிகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ஏப்ரல் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், சூழலுக்கு ஏற்ப கொரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் விதித்துக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் நிபுணர் குழு, பொது சுகாதாரத் துறை நிபுணர்களின் பரிந்துரைகளின்படியும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படியும் கடந்த பிப்ரவரி 28ம் தேதி மாநிலம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடனும் கட்டுப்பாடுகளுடனும் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் மார்ச் மாதம் தொடக்கம் முதலே கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் புள்ளி விவரங்கள் நாட்டில், கொரோனா தொற்று 2வது அலையின் பாதிப்பு முதல் அலையைவிட மோசமாக இருக்கும் என்று தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் நேற்று மட்டும் 2,342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்ரு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 16 உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்தது. இதில், அதிகபட்சமாக சென்னையில் 784 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 242 பேருக்கும் கோவை மாவட்டத்தில் 207 பேருக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 114 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு இன்று (மார்ச் 30) பிறப்பித்துள்ள உத்தரவிடில், தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது. மேலும், சூழலுக்கு ஏற்ப கொரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் விதித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில், மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்த விமானப் பயணங்கள் தவிர மற்ற அனைத்து சர்வதேச விமானப் பயணங்களுக்கும் தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், மாநிலத்தில் கொரோனா பரிசோதனை, கொரோனா தொற்று கண்காணிப்பு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தொடர வேண்டும் என்றும் நோ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்படி கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிகை மேற்கொள்ளப்படும் என்று தமிழக தெரிவித்துள்ளது.

அதே போல, கொரோனா ஊரடங்கு விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source : https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-order-lockdown-extended-till-april-30th-287436/