புதன், 21 ஏப்ரல், 2021

மணற் கொள்ளை, ரவுடியிசம், குடும்ப ஆதிக்கம்… ‘மாவட்டங்’களை இப்போதே எச்சரிக்கும் ஸ்டாலின்!

 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் ஒருவருக்கொருவர் பாரபட்சம் இல்லாமல் சரமாரியாக விமர்சனங்களை பொழிந்தனர். திமுகவுக்கு தேர்தல் பிரசார உத்தி நிபுணர் பிரசாந்த் கிஷோர் என்றால் அதிமுகவுக்கு சுனில் இப்படி பிரசாரங்களிலும் சளைக்கவில்லை. ஒருவழியாக வாக்குப்பதிவு முடிந்து அதிமுக – திமுக இரு பிரதான கட்சிகளும் வாக்கு எண்ணிக்கை நாளுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

திமுக தலைவர் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டு சந்திக்கும் இரண்டாவது தேர்தல் இது. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக உடல்நிலை தளர்ந்திருந்த நிலையில், மு.க.ஸ்டாலின்தான் கிட்டத்தட்ட திமுகவின் முதல்வர் வேட்பாளராக தேர்தலை சந்தித்தார். ஆனால், தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவினாலும் 90 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பலமான எதிர்கட்சியாக இடம்பெற்றது. அதற்குப் பிறகு, கருணாநிதி மரணத்திற்குப் பிறகு, கட்சியில் மூத்த தலைவர்களின் ஒப்புதலுடன் திமுக தலைவரானார். தொடர்ந்து, தனது மகன் உதயநிதியையும் எதிர்ப்பு இல்லாமல் திமுக மாநில இளைஞரணி செயலாளராக்கினார். மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் காலமானர். துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆனார். டி.ஆர்.பாலு பொருளாளராக ஆனார். இப்படி திமுகவில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டது.


அதே போல, அதிமுகவில் ஜெயலலிதாவின் மரணதிற்குப் பிறகு, அதிமுகவில் சசிகலா முதல்வர் பதவியேற்க இருந்த நிலையில், ஒபிஎஸ் கிளர்சி செய்தார், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார், முதல்வரான எடப்பாடி பழனிசாமி சசிகலாவை வெளியேற்றிவிட்டு ஓ.பி.எஸ் உடன் கைகோர்தார்; டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்று தனிக் கட்சி தொடங்கினார். சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தேர்தலில் ஈடுபடவில்லை; எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக தேர்தலை சந்தித்தது என பல விஷயங்கள் இந்த 4 ஆண்டுகளில் நடந்துவிட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த தேர்தல் தன்னை நிரூபிப்பதற்கான தேர்தலாக உள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுகவை இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தே ஆக வேண்டிய நிர்பந்தம், அவ்வப்போது சகோதரர் மு.க.அழகிரி தரும் அப்போதைய நெருக்கட்சிகள் என பல நெருக்கடிகளுக்கு மத்தியில் சிறப்பாக தேர்தலை எதிர்கொண்டுள்ளார்.

இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகள் மட்டுமில்லாமல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்தும், டிடிவி தினகரனின் அமமுக தலைமையிலான கூட்டணி என ஒரு 5 முனை போட்டி ஏற்பட்டது. இந்த தேர்தலில், தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுகவைவிட 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக மீதுதான் அதிமுக, பாஜக மட்டுமல்லாமல் கமல்ஹாசன், சீமான், டிடிவி தினகரன் ஆகியோரும் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். அதிலும் குறிப்பாக, 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் மணல் கொள்ளை, கிராணைட் கொள்ளை, நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, ரௌடியிசம் என சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருந்ததாக விமர்சனங்கள் கடும் குற்றச்சாட்டுகளாக முன் வைக்கப்பட்டது. இந்த விமர்சனங்களுக்கு பதிலளிப்பதற்கு திமுக தரப்பில் போதும்போதும் என்ற அளவில் திணறியது என்றே கூறலாம்.

திமுக தரப்பு ஆளும் அதிமுக மீது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சென்னை – சேலம் விரைவுச் சாலை திட்டம் கையப்படுத்தியது, குட்கா ஊழல், நிர்வாகத் திறன் குறைவு என பல விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து பிரசாரம் செய்தது. ஆனால், அதிமுக அதற்கு மாறாக திமுகவில் நடக்கும் வாரிசு அரசியல், குடும்ப அரசியல், 2006-2011 திமுக ஆட்சியில் நில அபகரிப்பு, மணல் கொள்ளை நடந்ததாகவும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் அவை மீண்டும் தலைதூக்கும் என்றும் அதிமுக கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் திமுக ஒரு கட்சியே அல்ல கார்ப்பரேட் கம்பனி, குடும்ப கட்சி என்று பகிரங்கமாக கடுமையாக விமர்சித்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு, மணல் கொள்ளை, ரௌடியிசம் எல்லாம் வளரும் என்று கடுமையாக சாடினார். இதே குற்றச்சாட்டுகளை யாருமே எதிர்பாராத வகையில், தேர்தல் பிரசாரக் கடைசி நாளில் அதிமுக எல்லா செய்தித்தாள்களிலும் 4 பக்கங்களுக்கு திமுக தலைவர்கள் மீதான நில அபகரிப்பு, ஊழல் குற்றச்சாட்டுகளை பத்திரிகைகளில் அதிமுக விளம்பர செய்திகளாக வெளியிட்டு திமுகவினரை மிரள வைத்தது. உண்மையில் இந்த விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் திமுகவினர் நேரடியாக பதில் சொல்ல முடியாமல் திணறினார்கள். சிலர், திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அது போன்ற தவறுகள் நடைபெறாமல் ஸ்டாலின் கட்டுப்பாடுடன் பார்த்துக்கொள்வார் என்று பதிலளித்தனர்.

இந்த சூழலில்தான் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தலுக்கு முந்தையக் கருத்து கணிப்புகளும் வாக்குப்பதிவுக்குப் பின், திமுகவின் தேர்தல் பிரசார உத்தி நிபுணர் பிரசாந்த் கிஷோரும் அவரது ஐபேக் குழுவினரும் திமுக தலைவர்களும் திமுக வெற்றி பெறும் என்று கூறியதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகிழ்சியாக இருக்கிறார். வாக்குப்பதிவு முடிந்தது குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்று ஓய்வெடுத்து வரும் ஸ்டாலின், திமுக வெற்றி பெற்றால் தனது அமைச்சரவையில் யார் யார் இடம் பெற வேண்டும். புது முகங்கள், இளைஞர்கள் யார் யாருக்கு வாய்ப்பு வழங்கலாம் என்பதை கட்சி தலைவர்களுடன் விவாதித்து உத்தேச பட்டியல் தயாரித்து வருகிறாராம்.

அதே போல, 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் திமுக மீது வைக்கப்பட்ட மணல் கொள்ளை, நில அபகரிப்பு, குடும்ப ஆதிக்கம், ரௌடியிசம் குற்றச்சாட்டுகள் அமைய உள்ள திமுக ஆட்சியில் இடம் பெறாமல் இருக்க வேண்டும். ஆட்சிக்கும் கட்சிக்கும் இழுக்கு உருவாக்கும் வகையில் யார் நடந்துகொண்டாலும் அவர் சீனியராக இருந்தாலும் ஓரங்கட்டப்படுவார் என்று ஸ்டாலின் மாவட்டங்களை இப்போதே எச்சரித்து வருகிறாராம். இதனால், குடும்பத்தினரும் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் குடும்பத்தினரின் தலையீடு இருக்கக் கூடாது என்பதில் குறிப்பாக உணர்த்தியுள்ளதாகவும் தெரிகிறது.

மொத்தத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஒரு மாறுபட்ட புதிய ஆட்சியை அளிக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

source : https://tamil.indianexpress.com/election/dmk-president-mk-stalin-plan-to-care-coming-dmk-government-from-alleged-allegation-294055/