Healthy Food in tamil : காலை உணவு கட்டாயம் தவிர்க்கப்படாக்கூடாத ஒன்று. அதே நேரம் ஊட்டச்சத்து மிகுந்ததாகவும் இருக்க வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் பசிக்கு ஏதாவது ஒன்றை சாப்பிட்டுவிட்டு அவரவர் வேலையை பார்க்க சென்றுவிடுகின்றனர். காலை உணவை தவிர்ப்பதை பெரும்பாலானோர் வழக்கமாக வைத்துள்ளனர். உடலுக்கு காலை உணவு எவ்வளவு முக்கியம் என்பது புரிவதில்லை.காலையில் என்ன சாப்பிட வேண்டும் எது ஆரோக்கியமான உணவு என்பது பலருக்கு குழப்பமாகவே உள்ளது. சிலர் பாதாம் சாப்பிடுவதை விரும்புவார்கள் ஒரு சிலர் ஒரு கப் டீ அல்லது காபியை குடித்துவிட்டு விட்டுவிடுகிறார்கள். காலை உணவைத் தவிர்ப்பது வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். உடல் பருமனை அதிகரிக்கும். அதைத் தொடர்ந்து பல வகையான நோய்களையும் உண்டாக்கலாம்.
ஊட்டச்சத்து நிபுணர் என்மாமி தன்னுடைய வலைதளப்பதிவில் இது பற்றி கூறியுள்ளார். நீண்ட நேரம் பசியுடன் இருப்பதோ எழுந்த பின் எதையாவது சாப்பிட்டுவிட்டு செல்வதோ உடலுக்கு ஆரோக்கியத்தை தராது. உடல் உட்புற உறுப்புகள் மற்றும் உடலின் மற்ற பகுதிகள் நீண்ட நேரம் ஓய்வுக்கு பிறகு விழித்தெழுந்து செயல்பட ஆரம்பிக்கும். அதனால் எழுந்தபின் நீண்ட நேரம் பசியுடன் அல்லது வெறும் வயிற்றில் இருப்பது நல்லதல்ல. உங்கள் நாளை ஒரு சத்தான காலை உணவுடன் தொடங்கினால் உற்சாகமாக இருக்கலாம்.ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைக்கும் சில உணவுகள்,
பாதாம்
பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதே சிறந்தது. ஊறவைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களின் அளவு அதிகரிக்கும். பாதாமை ஊறவைக்கும்போது அதன் கடினத்தன்மை மென்மையாக மாறிவிடும். பாதாமின் வெளிப்புற தோலில் இருக்கும் டானின், ஊட்டச்சத்துகளை உறிஞ்ச விடாமல் தடை செய்யும் தன்மை கொண்டது. பாதாமை நீரில் ஊறவைத்துவிட்டு தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவதன் மூலம் அதில் இருக்கும் சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படும். அதனால் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதே சிறந்ததாக கருதப்படுகிறது.ஊற வைத்த பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ, நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், புரதம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால் பாதாம் ஒரு சூப்பர் உணவாக கருதப்படுகிறது. இதில் உள்ள புரதம் நீண்ட நேரம் உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. ஒரு கப் தண்ணீரில் தினமும் இரவு 6 பாதாமை போட்டு மூடிவைத்துவிட வேண்டும். காலையில் அதை எடுத்து தோலை நீக்கிவிட்டு நன்றாக மென்று சாப்பிடவேண்டும்.
பேரீச்சை
இதில் உள்ள வைட்டமின் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. நரம்பு மண்டலச் செயல்பாட்டை அதிகரிக்கவும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.பேரீச்சையில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது; கரையக்கூடியது. இது செரிமான மண்டலப் பாதையில் உள்ள நீரை வெளியேற்ற உதவுகிறது. குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வயிற்றுப்போக்குக்குச் சிறந்த மருந்தாகும் இது செரிமானச் சக்தியை அதிகரிக்கும்.இதில் நிறைந்துள்ள பொட்டாசியம், இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது.
பேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து, ரத்தச்சோகையை சரிசெய்கிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தைத் தரும். ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ரத்தம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.
சியா விதைகள்
சியா விதைகளை முழு ஊட்டச்சத்து நிறைந்த விதை என கூறலாம். இதில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம், இரும்பு மற்றும் வைட்டமின் பி2 போன்ற சத்தக்களால் நிரம்பியுள்ளன. சியா விதைகள் அதிக புரதச்சத்து, நார்சத்து நிறைந்தது. இதனால் செரிமானப் பிரச்னைகளை சரிசெய்கிறது. உடலுக்கு உடனடியாக எனர்ஜி தரவல்லது. இந்த சூப்பர் விதைகளில் ஒரு டீஸ்பூன் எடுத்து இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் குடிக்கலாம். அல்லது விதையை பொடியாக்கி காலை உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
பப்பாளி
பப்பாளி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.ஏனெனில் இது சுத்தப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உங்கள் வயிற்றை சுத்தப்படுத்த உதவுகிறது. மென்மையான மற்றும் வழக்கமான குடல் இயக்கத்திற்கு இது சிறந்தது. குறைந்தது ஒரு மணி நேரம் பப்பாளி சாப்பிட்ட பிறகு எதையும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.பப்பாளி பழத்தில் நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் சி அடங்கியுள்ளன. இது இரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. ஏனெனில் அதிக கொலஸ்ட்ரால் தான் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது..