தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக திராவிட நாடு என்ற கோரிக்கை பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், அது தொடர்பான யாரும் அதிகாரப்பூர்வ கோரிக்கை வைக்கவில்லை. இதனால் அந்த பேச்சு அப்படியே அடங்கிப்போன நிலையில், தற்போது புதிதாக கொங்கு நாடு என்ற பேச்சு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் தமிழக பாஜக தலைவராக இருந்து கடந்த வாரம் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன் பதவியேற்பு குறிப்புகளில் கொங்கு நாடு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
அன்று முதல் தமிழகத்தில் கொங்கு நாடு என்று தனி பிரதேசமாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமான அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மத்திய அரசு இது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையிலும் தமிழகத்தில் தற்போது கொங்கு நாடு முழக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனார்
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம். ஏற்கனவே, மொழிவாரி மாநிலப் பிரிவினையால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்றுவரை தொடரும் நிலையில், சாதியை முன்வைத்து தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும். எனவே, வெள்ளைக்காரர்களைப் போல பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல், வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும்என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய திமுக எம்பி கனிமொழி எம்பி, தமிழகத்தை யாராலும் பிரிக்க முடியாது. தமிழகம் தற்போது பாதுகாப்பான ஆட்சியின் கீழ் உள்ளது இதனால் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் “திடீரென புதிய பிரச்சினையை பாஜக கிளப்பிவிட்டிருக்காங்க. தமிழ்நாட்டைப் பிரிச்சு கொங்கு நாடுனு பிரிச்சு அதை யூனியன் பிரதேசமா மாத்தப் போறதா தகவல் பரப்பிவிட்டிருக்காங்க. இது ரொம்ப ஆபத்தானது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக வன்மையா கண்டிக்கிறேன் என கூறியுள்ளார்.