நீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாஜக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது அகரம் அறக்கட்டளை சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் நீட் தேர்வு என்னும் தலைப்பில் இருந்த அறிக்கையில், ஏழை மற்றும் பணக்கார மாணவர்களுக்கு வேறுவேறு கல்வி வாய்ப்புகள் இருக்கும் நிலையில், ஒரே ஒரு தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு குறைவாக உள்ள நிலையில், 12 ஆண்டுகள் பள்ளிக்கல்விக்கு பிறகும் நுழைவுத் தேர்வு மூலமே மருத்துவராக முடியும் என்பது அவர்களை பாதிக்க கூடியது. நீட் தேர்வு அனைவருக்கும் ஆபத்தானது. நீட் தேர்வு தாக்கங்கள் பற்றி ஆராய தமிழக அரசு அமைத்துள்ள ராஜன் குழுவுக்கு கருத்துக்களை கூற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், நீட் தேர்விற்கு எதிராக மாணவர்களை குழப்பும் வகையில் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்புகிறார் என்றும், மத்திய அரசு கொண்டுவரும் மக்கள் நலத்திட்டங்களை உள்நோக்கத்துடன் எதிர்த்து வருகிறார் என்றும் நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாஜக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், நடிகர் சூர்யா இத்துடன் இதுபோன்ற செயல்களை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக இளைஞரணி நிர்வாகி வினோஜ்.பி. செல்வம் சூர்யாவை எச்சரித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு நீட் தேர்வை ஆதரித்து வருவதால், தமிழக பாஜகவும் நீட் தேர்வை ஆதரித்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. முந்தைய அதிமுக அரசு நீட் தேர்வுக்கு எதிராக, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
தற்போதைய திமுக அரசும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு எதிராகவும் பாஜக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-youthwing-passed-resolution-against-actor-surya-for-neet-exam-contradiction-320023/