திங்கள், 5 ஜூலை, 2021

கைவிடப்பட்ட சட்டப்பிரிவின் கீழ் ஆயிரத்துக்கும்மேற்பட்ட வழக்குகள் பதிவு: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

 தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கைவிடப்பட்ட பிரிவு 66ஏ-யின் படி ஆட்சேபனைக்கு உரிய பொருளடக்கத்தை இணையத்தில் வெளியிட்டவர்களை கைது செய்ய முடியும்.

சிவசேனா தலைவர் பால்தாக்ரே இறந்தபோது மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டு முழு அடைப்பு போன்ற சூழல் நிலவியது. இது குறித்து இணையதளம் ஒன்றில் கருத்துத் தெரிவித்த இரண்டு பெண்கள் கடந்த 2012ம் ஆண்டு 66ஏ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்த சட்டப்பிரிவை எதிர்த்து அந்தப் பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அதன் அடிப்படையில்தான் சர்ச்சைக்குரிய இந்த சட்டப்பிரிவை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2015ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இப்போது பியூசிஎல் என்ற தன்னார்வ நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில், கைவிடப்பட்ட பழைய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யபடுவது குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.நரிமன், கே.எம்.ஜோசப், பி.ஆர்.காவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது
அப்போது தன்னார்வ நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பாரிக், எப்படி வழக்குகள் அதிகரித்திருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த கைவிடப்பட்ட சட்டத்தின் கீழ் காவல் நிலையங்களில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

66ஏ சட்டப்பிரிவு கைவிடப்படுவதற்கு முன்பு 229 நிலுவை வழக்குகள் மட்டுமே இருந்தது. அதற்கு பின்னர்,அதாவது சட்டப்பிரிவு கைவிடப்பட்ட பின்னர் 1307 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 570 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதில் பெரும்பாலான வழக்குகள் மகாராஷ்டிரா(381),ஜார்கண்ட்(291), உத்தரபிரதேசம்(245), ராஜஸ்தான்(192) ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆந்திரபிரதேசம்(38), தமிழ்நாடு(7) ஆகிய வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைவிடப்பட்ட 66ஏ சட்டப்பிரிவு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உயர் நீதிமன்றங்களின் வழியே மாவட்ட நீதிமன்றங்களுக்கு அனுப்பும்படி 2019ம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் அனுப்பும்படியும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கும்படியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
விசாரணையின் இடையே கருத்துத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. இதன் மீது நாங்கள் நோட்டீஸ் அளிக்க உள்ளோம், என்று கூறினர்.

source https://news7tamil.live/supreme-court-notice-to-centre-on-cases-under-scrapped-law.html

Related Posts: