இந்து என்பது ஒரு மதம் இல்லை. அது ஒரு புவியில் அடையாளம் என ஜக்கி வாசுதேவ் கூறிய கருத்துக்களுக்கு, தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
தற்போது, தமிழக அரசு சார்பில், கோயில் சொத்துக்கள் பற்றிய விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. பல்வேறு கோயில்களின் புனரமைப்பு மற்றும் கோயில் நிர்வாக பணிகளுக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோயில்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான இந்து அமைப்புகள், வலதுசாரி அமைப்புகள் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க கூடாது என வலியுறுத்தி வருகின்றன.
கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், கோயில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, இந்து அமைப்புகளிடம் கொடுக்க வலியுறுத்தி வருகிறார். இதற்காக, அவர் ‘கோயில்களைக் காப்போம்’ என்ற முழக்கத்தையும் சில ஆண்டுகளாக வைத்து வருகிறார்.
ஜக்கி வாசுதேவ்வின் கருத்துக்களை நிதியமைச்சர் பி.டி.ஆர் எப்போதும் விமர்சனம் செய்து வருகிறார். அதுவும் அமைச்சராக பொறுப்பேற்ற பின் கடுமையான விமர்சனங்களை ஜக்கி மீது வைத்து வருகிறார். அமைச்சர் பி.டி.ஆர் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூட, ஜக்கி வாசுதேவ் ஒரு விளம்பர பிரியர், கடவுள் மற்றும் மதத்தை வைத்து பணம் சம்பாதிப்பதாகவும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் இந்து என்றால் யார் என சில ஆண்டுகளுக்கு முன் ஜக்கி வாசுதேவ் போட்ட ட்வீட்டிற்கு, தற்போது நிதியமைச்சர் பி.டி.ஆர் கொடுத்துள்ள விளக்கம் சமூக வலைதளத்தில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜக்கி வாசுதேவ் ஒரு ட்வீட்டில், இந்து என்பது ஒரு புவியியல் அடையாளம். ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு யானையை ஆப்பிரிக்கன் யானை என்கிறோம். அதேபோல் இந்தியாவில் உள்ள ஒரு மண்புழு கூட இந்து தான். என பதிவிட்டிருந்தார்.
இதற்கு தற்போது நிதியமைச்சர் பி.டி.ஆர் ஜக்கி வாசுதேவை Multi-DIMENSION-al Charlatan என குறிப்பிட்டுள்ளார். இதற்கு அர்த்தம் சிறப்பு அறிவு அல்லது திறமை இருப்பதாக பொய்யாக கூறும் நபர் என்பதாகும். மேலும் அவரது ட்வீட்டில், ஆப்பிரிக்கா என்பது கண்டம், இந்தியா என்பது நாடு, குடியரசு என்றும், இந்து என்பது மதம், நம்பிக்கை என்றும் குறிபிட்டுள்ளார். மேலும், யானை என்பது முதுகெலும்புள்ள விலங்கு, பாலூட்டி என்றும், மண்புழு என்பது நிலத்தில் வாழும் முதுகெலும்பிள்ளாத உயிரினம் என்றும் அருமையான விளக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
இந்த ட்வீட்டை, நடிகர் சித்தார்த் பகிர்ந்ததுடன் ஜக்கி தாக்கப்பட்டார் எனவும் பதிவிட்டுள்ளார். அமைச்சரின் பதிலடி ட்வீட்டும் சித்தார்த்தின் ரீ-ட்வீட்டும் இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-finance-minister-ptr-slams-jagadish-vasudev-hits-social-media-319249/