02/07/2021 தமிழ்நாட்டில் ஜூலை 12ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளர். மேலும், மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அறிவித்திருப்பதாவது: “கொரோனா பெருந்தொற்று ஒன்றிய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் மார்ச் 25, 2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுபடுத்த தேவையான கட்டுப்பாடுகளை ஜூலை 31, 2021 வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் ஜூன் 29, 2021 அன்று அறிவித்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில்உள்ள ஊரடங்கு ஜுலை 5, 2021 காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் கொரோனா நோய்தொற்று வெகுவாக குறைந்துள்ள போடிலும் நோய்த்தொற்று பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில்கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு ஜூலை 5, 2021 முதல் ஜூலை 12 காலை 6 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.
- மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து
*மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர சர்வதே விமான போக்குவரத்து
*திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயமும் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
*பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உயிரியல் பூங்காக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழுவுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
*இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மக்களின் வாழ்வாதாரம் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில்கொண்டும் மாநிலத்தின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து ஜூலை 5 முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
மேலும், ஏற்கனவே இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட செயல்பாடுகள் தவிர அனைத்து செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இனி 8 மணி வரை இயங்கலாம். உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை 50% பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-govt-extends-lockdown-with-relaxation-until-july-12-319650/