04.07.2021
மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரிலிருந்து 90 கி.மீ தூரத்தில் உள்ள மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு ஒரு நீர்த்தேக்கத்தைக் கட்ட முடிவு செய்துள்ளது. ஆனால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். இந்த திட்டத்தினால் தமிழகத்திற்கு பாதிப்பு எதுவும் இல்லை என எடியூரப்பா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா எழுதியுள்ள கடிதத்தில், சம்பந்தப்பட்ட அனைவரின் நலனுக்காகவும், கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் இடையில் ஒரு நல்ல உறவை பேண, தமிழக அரசு சரியான மனப்பான்மையுடன் இந்த திட்டத்தை எதிர்ப்பதை கைவிட வேண்டும். இந்த திட்டம் தமிழக விவசாயிகளை பாதிக்காது.
பெங்களூரு நகரம் உட்பட கர்நாடகாவின் குடிநீர் மற்றும் உள்நாட்டு நீர் தேவைகளை பூர்த்தி செய்ய அமைக்கப்பட்ட இந்த திட்டம், எந்த வகையிலும் தமிழக விவசாய சமூகங்களின் நலன்களை பாதிக்காது. கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் காவிரி துணைப் படுகையில் தமிழக அரசு எடுத்த பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், கர்நாடகா அரசு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வை நடத்துவதற்கான குறிப்பு விதிமுறைகளுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது. என்று எடியூரப்பா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுகளுக்கு இணங்க, மேகதாது அணையில் 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க உச்சநீதிமன்றத்தால் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலினுக்கு எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.
மேகதாது அணை திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த நிலையில் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதம் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, அந்த கடிதத்துக்கு உரிய பதிலை எடியூரப்பாவுக்கு, மு.க.ஸ்டாலின் எழுதுவார். அந்த கடிதத்தில் எங்களது கருத்துகளை அவர் ஆணித்தரமாக தெரிவிப்பார். கடிதம் எழுதுவது அவரது (எடியூரப்பா) இஷ்டம். இவரும் (மு.க.ஸ்டாலின்) பதில் கடிதம் எழுத உள்ளார் என தெரிவித்துள்ளார்.
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம், கர்நாடகா இடையே மத்திய அரசு இதுவரை சமரச முயற்சியில் ஈடுபடவில்லை என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.
இதேபோல், மார்கண்டேய கர்நாடக அணை கட்டியுள்ளது தொடர்பாக கேட்டபோது, காவிரி நடுவர் மன்றத்தை விரைவில் அமைக்க வலியுறுத்துவோம் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகா முதலமைச்சர் எடியூரபாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: “பெங்களூரு குடிநீர்த் தேவைக்காக அணைக் கட்டுவதாக கூறும் கர்நாடக அரசின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இத்திட்டம் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்ற கருத்தையும் ஏற்க இயலாது. மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும். தமிழகம் – கர்நாடகம் இடையே நல்லுறவு தழைக்க ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/karnataka-cm-invites-tamilnadu-cm-for-talks-about-mekedatu-plan-duraimurugan-answer-319999/