05/07/2021 கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக இருந்த முருகன், துணைவேந்தர் அறையில் பாஜகவில் இணைந்த புகைப்படம் வெளியானதால் சர்ச்சையானது.
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரிரியர் முருகன் பதிவாளராக பதவி வகித்து வந்தார். இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை தலைவராகவும் இருந்தார். முருகனின் ஜூன் 30ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதே நாளில் முருகன் பாஜகவில் இணைந்ததாகத் தகவல் வெளியானது.
பாஜக மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ப்ரீத்தி லட்சுமி மற்றும் மாநில ஊடகப் பிரிவு செயலாளர் சபரி கிரீஸ் ஆகியோர் முன்னிலையில் முருகன் பாஜகவில் இணைந்தார் என்ற தகவல் வெளியானது. டாக்டர் ப்ரீத்தி லட்சுமி மற்றும் சபரி கிரீஸ் இருவரும் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் அறைக்கான காத்திருப்பு அறையில் பேராசிரியர் முருகனுக்கு பா.ஜ.க உறுப்பினர் அட்டை வழங்கும் புகைப்படம் வெளியானது.
இதனை, பாஜக மாநில இளைஞரணி செயலாளர் ப்ரீத்தி லட்சுமி தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அரசுப் பணியில் இருந்து ஒய்வு பெற்ற பேராசிரியர் அதே நாளில் அரசியல் கட்சியில் இணைந்தது மட்டுமல்லாமல், துணைவேந்தர் அறைக்கான காத்திருப்பு அறையில் வைத்து முருகன் பாஜகவில் இணைந்தது தொடர்பாக புகார் எழுந்ததுள்ளது.
துணை வேந்தர் அறையின் காத்திருப்பு அறையில் பேராசிரியர் பாஜகவில் இணைந்தது தவறு என்று கூறி இந்த நிகழ்வு குறித்து பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியதையடுத்து ப்ரீத்தி லட்சுமி அந்த பதிவை நீக்கினார்.
மேலும், ஒரு பேராசிரியர் ஓய்வு பெற்ற அதேநாளில் அவர் அரசியல் கட்சியில் இணைந்தது மிகவும் தவறு. அதுவும் துணைவேந்தர் அறையில் வைத்து அரசியல் கட்சியி இணையும் நிகழ்ச்சி நடந்திருப்பது சட்டவிரோதமானது என்ற விமர்சனங்கள் எழுந்தன. மேலும், பேராசிரியர் முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் குரல் எழுப்பினர்.
இந்த சர்ச்சைக்குரிய நிகழு குறித்து ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ், “இந்த சம்பவம் நடந்த அன்று நான் பல்கலைக்கழகத்தில் இல்லை. நான் ஜூன் 30-ம் தேதி அமைச்சரின் ஆய்வு கூட்டத்துக்காக சென்னை சென்றிருந்தேன். பாஜகவினர் அன்று என்னை மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்காக வந்துள்ளனர். நான் இல்லாததால் பதிவாளரை சந்திக்கக் கேட்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் முருகனை சந்தித்து பேசியுள்ளனர். புகைப்படத்தில் இருப்பது துணைவேந்தரை சந்திப்பதற்கான காத்திருப்பு அறைதான். அப்போது அவர்கள் முருகனிடம் கையில் இருந்த ஒரு கார்டில் நம்பரை எழுதிக் கொடுத்து போட்டோ எடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து நான் முருகனிடம் கேட்டபோது, நான் கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை்த் திரும்ப கொடுத்துவிட்டேன். கட்சியில் இருந்தும் விலகிவிட்டேன் என்று சொல்கிறார். ஆனால், அவர் எப்போது கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்தார் எனத் தெரியவில்லை. அதே நேரத்தில், இந்த சம்பவத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. எதேச்சையாக நடந்துள்ளது. வரும்காலத்தில் இது போல நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
துணை வேந்தர் அறையின் காத்திருப்பு அறையில் பாஜகவில் இணைந்தது குறித்த ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் முருகன், “இந்த நிகழ்வு நடந்ததை நான் மறுக்கவில்லை. நான்தான் பாஜகவில் சேர விருப்பம் தெரிவித்தேன். ஒரு விபத்து போல துணைவேந்தர் காத்திருப்பு அறையில் வைத்து புகைப்படமும் எடுத்துவிட்டனர். ஆனால், நான் இன்னும் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு கல்விப் பணியில் இருக்க விரும்புகிறேன். அதனால், அடுத்த நாளே பாஜக உறுப்பினர் அட்டையை திரும்ப கொடுத்துவிட்டேன். பாஜக தலைமை அலுவலகத்துக்கு மெயிலும் அனுப்பிவிட்டேன்” என்று கூறினார்.
இது குறித்து பாஜக மாநில ஊடகப் பிரிவு செயலாளர் சபரி கிரீஸ் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், “பேராசிரியர் முருகன் அவராக முன்வந்து தான் பாஜகவில் சேர விருப்பம் தெரிவித்தார். அதனால், அவரை மிஸ்டுகால் கொடுக்க கூறினோம். அவர் மிஸ்டுகால் கொடுத்த பிறகு உறுப்பினர் அட்டை கொடுத்தோம். இப்போது அந்த புகைப்படத்தை அவரே குரூப்பில் போட்டு பிரச்னையாகிவிட்டது. உறுப்பினர் அட்டை வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்துவிட்டார். இந்த நிகழ்வு தொடர்பாக, அவர் ஒரு கடிதமும் கேட்கிறார். கல்வி பணியில் தொடர வேண்டும் என்பதற்காக கட்சியில் தொடரவில்லை என்கிறார். உறுப்பினர் அட்டையை பல்கலைக்கழகத்தில் கொடுக்கவில்லை. அவரது வீட்டில் வைத்துதான் கொடுத்தோம். பல்கலைக்கழகத்தில் இருப்பதைப் போல வீட்டிலும் அப்படியான செட்அப் இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக இருந்த முருகன், துணைவேந்தர் அறையில் பாஜகவில் இணைந்ததாக சர்ச்சையானது. உயர்க்கல்வியில் பாஜகவினரின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/bharathiyar-university-registrar-joined-in-bjp-at-vc-reception-goes-controversy-320473/