தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் உத்தரவின் பேரில், காங்கிரஸ் நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரங்களை சேகரிக்கும் பணியில் சத்தமில்லாமல் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கொரோனா நிவாரண இயக்கம் என்ற பெயரில் காங்கிரஸ் நிர்வாகிகள், தங்களுடைய கொரோனா போராளி தகவல் சேகரிப்பு படிவத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம், கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் விவரம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் முகவரி, கொரோனாவால் இறந்தவர் குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவராக இருந்தாரா உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரிக்கிறார்கள்.
இது குறித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பேசியபோது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சிக்காக உழைத்த பல எளிமையான தொண்டர்களுக்கு கட்சி பொறுப்பு அளித்தார். அதோடு விட்டுவிடாமல் அவர்களுக்கான வேலை திட்டங்களையும் கொடுத்து வருகிறார். பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து மாநகரம், மாவட்டம், நகரம், பேரூராட்சி என அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் போராடங்களை நடத்த வைத்துள்ளார்.
இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் மக்களுக்கு உதவியிருக்கிறார்கள். இப்போது தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கொரோனா நிவாரண இயக்கம் என்ற பெயரில் காங்கிரஸ் நிர்வாகிகளை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விவரம், கொரோனாவால் இறந்தவர் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபராக இருந்தாரா, அவர்களுக்கு எத்தகைய உதவித் தேவை என்பது போன்ற பல தகவல்களை சேகரித்து வருகிறார்கள். அதற்காக, வார்டுக்கு 10 பேர் கொரோனா போராளிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஒரு நாளைக்கு 10 -15 வீடுகளுக்குச் சென்று கொரோனா போராளி தகவல் சேகரிப்பு படிவத்தில் விவரங்களை சேகரித்து வருகிறார்கள். அவர்கள் வெறுமனே பாதிக்கப்பட்டவரின் வீடுகளுக்கு சென்று தகவல்களை மட்டும் சேகரிக்காமல், தகவல் பெற்றுக்கொண்டோம் என்பதற்கு அத்தாட்சியாக ஒப்புகைச் சீட்டும் கொடுத்துவிட்டு வருகிறோம். இது போல, திருச்சி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 60 சதவீத பணிகளை முடித்துவிட்டோம்.
மாவட்டத்தில் கொரோனா தொற்றால் யார் யார் பாதிக்கப்பட்டார்கள், இறந்தவர்கள் யார் என்ற தகவலை மாவட்ட நிர்வாகத்திடம் பெற்றுக்கொண்டு அந்த தகவலின் அடிப்படையிலும் அந்தந்த வார்டு காங்கிரஸ் நிர்வாகிகளின் உதவியுடனும் இந்த தகவல்களை சேகரித்து வருகிறோம். இதற்காக காங்கிரஸ் மாநில தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில் ஒரு வார் ரூம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சேகரித்த தகவல்களை இந்த மாத இறுதியில், மாநில காங்கிரஸ் தலைமையிடம் ஒப்படைப்போம். அதற்குப் பிறகு, என்ன செய்வார்கள் என்பது கட்சி தலைமை முடிவெடுக்கும் என்று கூறினார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கொரோனா நிவாரண இயக்கம், கொரோனா போராளி தகவல் சேகரிப்பு படிவம் ஒன்றையும் அளித்துள்ளது. அதில், வட்டாரம், நகரம், பேரூர், கிராமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தகவலை சேகரிப்பவர் பெயர் மற்றும் கட்சியில் வகிக்கும் பொறுப்பு குறிபிடப்பட்டுள்ளது.
அடுத்து ஒரு கொரோனா போராளி தொடர்ந்து 30 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 வீடுகளுக்குச் செல்ல வேண்டும். மேலும், கூடுதலாக 10 நாட்கள் எடுத்துகொள்ளலாம். 30 நாட்களில் 200 வீடுகளுக்காவது செல்ல வேண்டும்.
கொரோனா போராளிகள், வீடுகளில் சென்று கேட்க வேண்டிய கேள்விகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- உங்கள் குடும்பத்தில் யாராவது கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறாரா?
2.கொரோனா பாதிப்பில் குடும்ப உறுப்பினர்கள் யாராவது இறந்தார்களா?
3.ஆம் என்றால், அவரடு பெயர், வயது, குடும்பத்தினரின் செல்பேசி, மற்றும் முகவரி:
4.கொரோனாவால் இறந்தவர், குடும்பத்துக்கு வருவாய் ஈட்டுபவராக இருந்தாரா?
5.கொரோனா பொதுமுடக்கம் காரணமாக உங்கள் குடும்பத்தில் யாராவது வேலையை இழந்துள்ளீர்களா? ஆம் என்றால் அவரது பெயர் மற்றும் வயது என்ன?
6.உங்களுக்கு எத்தகைய உதவி தேவை? மளிகைப் பொருட்கள், வேலை, கல்வி, நிதியுதவி ஆகிய கேள்விகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதையடுத்து ஒப்புகைச் சீட்டு பகுதி உள்ளது. அதில் தகவல் சேகரித்தவரின் விவரம், அவருடைய செல்பேசி ஆகியவை குறிப்பிடப்பட்டு அந்த ஒப்புகைச் சீட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் தருகிறார்கள். இப்படி, காங்கிரஸ் நிர்வாகிகள் தெளிவாக திட்டமிட்டு தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் இந்த பணி எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று விசாரித்தபோது, வேலூர் மத்திய மாவட்ட தலைவர் சுரேஷ், “நாங்கள் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை வாங்கியிருக்கிறோம். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 26,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் வட்டாரத்திற்கு 10 பேர் கொரோனா போராளி குழு அமைத்து கடந்த 10 நாட்களில் 2,000க்கு மேற்பட்டவர்களின் தகவல்களைப் பெற்றிருக்கிறோம். 8ம் தேதி பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்துகிறோம். அதில் கவனம் செலுத்துகிறோம். அது முடிந்த பிறகு, முழு வீச்சில் தகவல்கலை சேகரித்து கட்சி தலைமைக்கு அனுப்புவோம். தகவல் பெறுகிறபோது யாருக்காவது உடனடியாக உதவிகள் தேவைப்பட்டால் அரிசி, மளிகைப் பொருட்கள் வாங்கி கொடுக்கிறோம். இந்த தகவல்களை எல்லாம், இந்த மாத இறுதிக்குள் சேகரித்து தலைமைக்கு அனுப்பிவிடுவோம். இந்த தகவல்களின் அடிப்படையில் கட்சி தலைமை என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுப்பார்கள்.” என்று கூறினார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸி கொரோனா நிவாரண இயக்கம் குறித்தும் தகவல் சேகரிக்கப்படுவதைக் குறித்தும் காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, “கொரோனா தொற்று பரவல் தொடங்கியபோது, பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தார்கள். பல கால்நடையாகவே சென்றார்கள். பலர் வழியிலேயே உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்தார்கள். இதையெல்லாம் பார்த்து வருத்தமடைந்த சோனியா காந்தி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில் கட்டணங்களை காங்கிரஸ் கட்சி ஏற்கும் என்று கூறினார். அதற்குப் பிறகுதான், நரேந்திர மோடியின் பாஜக அரசு இலவச ரயில்களை இயக்கியது. கொரோனா பெருந்தொற்று நோய் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு விட்டது. மற்ற பேரிடர்களுக்கு அளிக்கப்பட்டது போல நிவாரணம் அறிவிக்க வேண்டும். ஆனால், நரேந்திர மோடியின் பாஜக அரசு இன்னும் நிவாரணத்தை அறிவிக்கவில்லை. அதனால், இது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்குவதற்காக காங்கிரஸ் கட்சி நடவடிக்கையின் முன் தயாரிப்பாக இருக்கலாம். இந்த தகவல்கள் எல்லாம், மாநில தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டு டெல்லி தலைமைக்கு செல்லும். பிறகு, இது குறித்து எந்த முடிவாக இருந்தாலும் காங்கிரஸ் தேசியத் தலைமைதான் முடிவு செய்யும்.” என்று கூறினார்கள்.