ஞாயிறு, 5 ஜூன், 2022

கம்பெனி சட்டம் பிரிவு 25 சொல்வது என்ன?

 ஏ.ஜே.எல் நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு நாளிதழின் பங்கு பரிமாற்றம் முறைகேடு வழக்கின் விசாரணைக்காக சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டுமென அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து 2013 இல் பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி புகாரளித்திருந்தார். யங் இந்தியா நிறுவனம் மூலம், ஏ.ஜே.எல் நிறுவனத்தின் பங்குகளை குறைந்த விலைக்கு காந்தி குடும்பம் வாங்கியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. தற்போது, 86 சதவீத பங்குகளை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சோனியா மற்றும் ராகுலுக்கு நீதிமன்றம் 2015 டிசம்பர் 19 அன்று ஜாமீன் வழங்கியது

நஷ்டத்தில் சிக்கி ஏஜேஎல் நிறுவனம் கடனாளியாக மாறியதால், அதன் பங்குகளை விற்று கடன் இல்லாத நிறுவனமாக மாற்றப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கூற்றுப்படி, நிறுவனங்கள் சட்டப்பிரிவு 25-ன் சிறப்பு விதியின் கீழ் உருவாக்கப்பட்ட யங் இந்தியா, லாப நோக்கமற்ற நிறுவனமாகும். அதன் பங்குதாரர்கள் அல்லது இயக்குநர்களுக்கு லாப தொகை வழங்க முடியாது என தெரிவித்துள்ளது.

சட்டப்பிரிவு 25 நிறுவனம் என்றால் என்ன?

கம்பெனி சட்டம் பிரிவு 25இன் படி, இந்தப் பிரிவின் கீழ் அமைக்கப்படும் நிறுவனங்கள் தங்களது லாபத்தையும் வருமானத்தையும் நிறுவனத்தின் பொருள்களுக்காக செலவு செய்ய வேண்டும். நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு லாபத்தை அளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 8, விளையாட்டு, கல்வி, ஆராய்ச்சி, சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பிற பொருள்களை உள்ளடக்கியது.

இது பொது அல்லது தனியார் நிறுவனமாக இருந்தாலும், செக்‌ஷன் 25 நிறுவனம் அதன் உறுப்பினர்களுக்கு லாபத்தை அளிக்க தடை செய்யப்பட்டுள்ளது

செக்‌ஷன் 25 அல்லது செக்‌ஷன் 8 நிறுவனங்கள் வேறு உள்ளதா?

கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திடம் உள்ள விவரங்களின்படி, இந்த பிரிவின் கீழ் ஏராளமான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில், ரிலையன்ஸ் அறக்கட்டளை, ரிலையன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை, கோகோ கோலா இந்தியா அறக்கட்டளை, அமேசான் கல்வி அறக்கட்டளை ஆகியவை அடங்கும்.

செக்‌ஷன் 25ன் கீழ் நிறுவனங்கள் ஏன் உருவாக்கப்படுகின்றன?

அறக்கட்டளை அமைப்பிற்குப் பதிலாக பிரிவு 25, இப்போது பிரிவு 8 இன் கீழ் ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கவே மக்கள் விரும்புவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், பெரும்பாலான வெளிநாட்டு நன்கொடையாளர்கள் அறக்கட்டளையை விட ஒரு நிறுவனத்திற்கு பங்களிக்கவே விரும்புகிறார்கள். ஏனெனில் அவை மிகவும் வெளிப்படையானவை மட்டுமின்றி அதிக வெளிப்படுத்தல் அறிக்கை வழங்குவதாக சொல்லப்படுகிறது.

ஒரு நிறுவனத்தை லாப நோக்கமற்ற நிறுவனமாக மாற்ற வேண்டும் என்றால், அதனை அறக்கட்டளையாக மாற்ற முடியாது. ஆனால், பிரிவு 25/ பிரிவு 8 நிறுவனமாக மாற்றலாம் என்று வரி நிபுணர்கள் கூறுகின்றனர்.

source https://tamil.indianexpress.com/explained/section-25-company-not-for-profit-sharing-462757/