புதன், 8 ஜூன், 2022

மீளுமா இந்திய பொருளாதாரம் ?

 

ப. சிதம்பரம்  

கடந்த  2021 மே 31, அன்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தேசிய வருமானத்தின் தற்போதைய  மதிப்பீடுகளையும்  மொத்த உற்பத்தி மதிப்பளவின் காலாண்டு மதிப்பீடுகளையும் வெளியிட்டது. இது குறித்து  ஊடகங்களில் பேசிய தலைமைப் பொருளாதார ஆலோசகர்  குரல் தெம்புடன் இல்லை. மாறாக எச்சரிக்கையுடன், ஒரு வித நம்பிக்கையுடன்  பேசினார்.  பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் அறிந்தது போல், இந்தியப் பொருளாதாரம் இன்னும்  மீட்டெடுக்கப் படவில்லை என்பது இவருக்கும் தெரியும்.  

மோசம் மேலும் மோசம்

இதில்  மிக மோசமான  தகவலும் உண்டு. கடந்த  2022  மார்ச் 31 அன்று நிலையான விலையில்  நாட்டின் மொத்த பொருளாதார மதிப்பு ரூ. 147.36 லட்சம் கோடி. ஆனால் 2000 ஆண்டு  மார்ச் 31, 2020 அன்று  கூட இதன் மதிப்பு ரூ. 145.16 லட்சம் கோடி என்ற அளவிலேயே இருந்தது. இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை.  தெளிவான பாதை இல்லாமல் நமது பொருளாதாரம் ஒரே இடத்தில் தான் இருக்கிறது என்பது இதில் இருந்து தெரிகிறது.  அதே நேரத்தில் தனிநபர் வருமானம் இரண்டு ஆண்டுகளில் ரூ.1,08,247ல் இருந்து ரூ.1,07,760 ஆக குறைந்துள்ளது. இதனால் ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகிறார்கள்.  

அடுத்த மோசமான  செய்தி என்னவென்றால், 2021-22 ல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் வரைபடத்தின் படி நமது வளர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.  கடந்த  நான்கு காலாண்டுகளுக்கான  வளர்ச்சி விகிதம்  20.1, 8.4, 5.4 மற்றும் 4.1 சதவீதமாக இருக்கிறது. கோவிட் காலத்துக்கு முன்னால் 2019-20 ல் நாலாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 38,21,081 கோடியாக இருந்தது. மேலும் 2021-22 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில்  இது ரூ.40,78,025 கோடியாக உள்ளது.  

வெறும்  8.7 சதவீத வளர்ச்சி விகிதத்துடன்  இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடு  என்ற பெருமைக்கு இடமில்லை. பணவீக்கம் , வேலையில்லாத் திண்டாட்டம், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை, பட்டினியின் பாதிப்பு, சுகாதார குறிகாட்டிகள் சரிவு மற்றும் கற்றல் விளைவுகளின் சரிவு போன்றவற்றின் அடிப்படையில் அந்தப் பெருமைக்கு எந்த அர்த்தமும் இல்லை. 8.7 சதவீத வளர்ச்சி விகிதம் என்பது பார்ப்பதற்கு பெருமையாக இருந்தாலும் அவற்றின் முழுமையான பின்னணியை நாம் ஆராய வேண்டும். முந்தைய ஆண்டு பொருளாதார வளர்ச்சியான  (-) 6.6 சதவீதத்தையும் ஒப்பிட வேண்டும். இரண்டாவதாக, சீனா 2021ல் 8.1 சதவீதமாக வளர்ந்திருந்தது.  அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2,600 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்த ஒரு வருடத்தில் சேர்த்திருக்கிறது.  

நாம் கவனமாக உணர்ச்சிகளுக்கு இடம் தராமல் நாம் நிதானமாக சிந்தித்து பார்த்தால்  2022-23 நிதியாண்டிலும் அதற்கு அப்பாலும் நம்முடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.  நம்மை நாமே பெரிதாக நினைத்துக் கொண்டிருப்பதால் நாம் நமக்கு  அப்பால்  உள்ள உலகத்தை மறந்து விடுகிறோம்.  நமக்கு உலகத்தின் சந்தை, பொருட்கள், மூலதனம், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள்  போன்றவை அவசியம் தேவை. உலக அளவில் பொருளாதாரம் பெரிய நெருக்கடியில் இருக்கிறது.  அமெரிக்காவில் பணவீக்க விகிதம் மற்றும் விலைவாசி உயர்வு, வட்டி வீதம்  அதிகரித்து வருகின்றன. பொருட்களுக்கும், சேவைகளுக்கும் தேவை குறைந்து வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு புதிய வகை நோய் கிருமிகள் பரவுவதால் சீனாவின்  பெரும்பாலான நகரங்களில் முழுமையாகவும் பகுதியளவிலும் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் அந்த நாட்டின்  ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி  குறைந்துள்ளது.  கேஸ் விலை கடுமையாக உயர்ந்துவிட்டதால் ஐரோப்பியர்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்து உள்ளது.

உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி வீதம் 2022ல் 4.4%-லிருந்து 3.6%ஆகக் குறையும் என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் திருத்தியிருப்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை வகுப்புக் குழு கருத்தில் கொண்டிருக்கிறது. உலக வர்த்தக அமைப்பு (டபிள்யு.டி.ஓ), உலக வர்த்தக வளர்ச்சி 4.7%லிருந்து 3.0%ஆகக் குறையும் என்று தன்னுடைய பழைய மதிப்பீட்டை திருத்தியிருக்கிறது. பணவீக்க விகிதம் பணக்கார நாடுகளில் 5.7% ஆகவும், வளரும் நாடுகளில் 8.7% ஆகவும் இருக்கும் என்றும் பன்னாட்டுச் செலாவணி நிதியம் மதிப்பிட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழுவானது (எம்.பி.சி.) பொருளாதார வளர்ச்சிக்கு சவாலாக விளங்கக்கூடிய பல அம்சங்களை அடையாளம் கண்டிருக்கிறது. உலக அளவில் பொருளாதாரச் சூழல் மோசமாகிக் கொண்டே வருகிறது.  பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது, மூலப் பொருள்களையும், தயாரான  பொருள்களையும் சந்தைக்கு அனுப்ப முடியாதபடி  விநியோகச் சங்கிலியில் தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே வருகின்றன. வளர்ந்த நாடுகள், தங்களுடைய பணக் கொள்கையை நிலைமைக்கேற்ப மாற்றிக்கொண்டே இருப்பதால்  நிலையற்ற ஏற்ற இறக்கங்கள் தொடர்கின்றன என்று பணக்கொள்கை வகுப்புக் குழு சொல்கிறது. பொறுப்பில் உள்ள யாராவது இதையெல்லாம் கவனிக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.  

நோய் கண்டு பிடித்தாகி விட்டது  ஆனால் சிகிச்சை  இல்லை

பொருளாதாரத்துக்கு  புது ரத்தம் பாய்ச்சவும் , வளர்ச்சியை  அதிகரிக்கவும் தூண்டவும் ஐந்து முக்கிய துறைகளில் செய்ய வேண்டியவற்றை ரிசர்வ் வங்கியின் மாதாந்திர அறிக்கை (மே, 2022) அடையாளம் கண்டுள்ளது.

  • தனியார் முதலீடு  
  • அரசின் மூலதனச் செலவுகள்  
  • அடித்தளக் கட்டமைப்புகள்  
  • பணவீக்கத்தை பராமரித்தல்  
  • பேரியல் பொருளாதார  நிலைத்தன்மை


இந்த ஐந்து அம்சங்களில் அரசின் மூலதனச் செலவு என்ற அம்சம் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒன்றிய அரசின் வரவு-செலவு அறிக்கை தாக்கலுக்குப் பிறகு பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மீதான கூடுதல் உற்பத்தி வரியைக் குறைத்ததாலும், மானியச் செலவுகளை அதிகப்படுத்தியதாலும், சில சமூக நலத் திட்டங்களுக்கான செலவுகளை உயர்த்தியதாலும் மூலதனச் செலவுகளுக்கு அதிக நிதியை ஒதுக்க முடியாமல் அரசு திணறுகிறது. நிதி விநியோகத்தில் துன்பங்கள்  இருக்கும் வரையிலும், ஏற்கனவே உள்ள உற்பத்திக் கொள்ளளவு முழுதாகப் பயன்படுத்திக் கொள்ளப்படும் வரையிலும் தனியார் துறை முதலீடு வேகமாக செயல்பட முடியாது. அன்னிய முதலீடுகளை பொருத்தவரையில் கெய்ர்ன், ஹட்சிசன், ஹார்லி-டேவிட்சன், ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு, ஹோல்சிம், சிட்டி பேங்க், பார்க்லேஸ், ஆர் பி எஸ், மெட்ரோ கேஷ் அண்ட் கேரி ஆகியவை இந்தியாவிலிருந்து  விலகி விட்டன.  

அடித்தளக் கட்டமைப்பில் மேம்பாடு ஏற்பட வேண்டும் என்றால் டெண்டர் நடைமுறைகளில், விலை விதிப்புகளில், திட்டங்களைச் செயல்படுத்துவதில், திட்டங்களுக்குப் பொறுப்பேற்பதில் வெளிப்படையான மாறுதல்கள் அவசியம். ஆனால் அவற்றுக்கான அறிகுறிகளே தென்படவில்லை. அடித்தளக் கட்டமைப்புத் துறைகளில் எண்ணிக்கையைக் கூட்டுகிறோமே தவிர தரத்தை மேம்படுத்துவதாக இல்லை. மோடி தலைமையிலான அரசின் கடந்த காலச் செயல்பாடுகளைப் பார்க்கும்போது விலைவாசியைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதும் பேரியல் பொருளாதாரத்தை நிலையாகப் பராமரிப்பது எவ்வாறு என்பதும் தெரியாமல் திகைப்பது புரிகிறது. ஆர்ப்பரிக்கும், கொந்தளிப்பான கடலில் கப்பலை பாதுகாப்பாகச் செலுத்துவதற்கு கப்பலின் கேப்டனும்  அவருடைய அணியினரும் ஒற்றுமை உணர்வுடன்  செயல்பட்டாக வேண்டும்.  முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் கருத்தொற்றுமை இல்லை. பொது சரக்கு சேவை வரி விவகாரமானது ஒன்றியம் மற்றும்  மாநில அரசுகளுக்கு இடையிலான  பரஸ்பர நம்பிக்கையை குறைத்து விட்டது. மாநில ஆளுநர்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எதிர்ப்புணர்வுடன்  செயல்படுகிறார்கள். எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் எதிராக மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் ஏவிவிடப்பட்டு அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.  

ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேற தொழிலாளர் பங்கேற்பு சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும். தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 40 சதவீதமாக இருந்தால் எந்த நாடும் பொருளாதார சக்தியாக மாற முடியாது. இந்தியாவின் உழைக்கும் வயதுடைய மக்களில் பெரும்பாலோர் வேலை செய்யாமல் இருக்கிறார்கள் அல்லது வேலை தேடாமல் இருக்கிறார்கள். மேலும்  தற்போது  பெண்கள் அதிகம் படித்து வந்தாலும் இவர்களது தொழிலாளர் பங்கேற்பு விகிதம் வெறும்  9.4 சதவீதம் மட்டுமே. அதிகரித்து தற்போது  7.1 சதவீதமாக உள்ளது.  

நமது இந்திய  பொருளாதாரம்  மந்தமான நிலையில் உள்ளது. நாம் மிக நன்றாக நோயின் தன்மையை கண்டுபிடித்து விட்டோம். நம்மிடம்  அதற்கான மருந்தும் இருக்கிறது. ஆனால், மருந்துகளைக் கொடுக்க வேண்டிய மருத்துவர்தான் சரியானவராக இல்லை. போலியானவராக இருக்கிறார். நோயின் தன்மையை அறிந்த பின்னரும் நோயாளியை பற்றி அக்கறை கொள்ளாமல், அவர் மெல்ல சாகட்டும் என  அலட்சியமாக இருக்கிறார்.  

தமிழில்  : த. வளவன் 


source https://tamil.indianexpress.com/opinion/p-chidambaram-writes-economy-still-in-the-woods-gdp-india-lfpr-national-statistical-office-464380/