எஸ். இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தொக்காமர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளை சுற்றி சுவர் மற்றும் வேலிகள் அமைக்கப்பட்டதாக வந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் நடமாட்டத்தை முடக்கி வைத்திருக்கக் கூடிய சாதியவாத சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தமிழக அரசு அதில் தலையிட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி சிறப்பு முகாமில் கடந்த கால் நூற்றாண்டாக சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும், சிறப்பு முகாம்களை உடனடியாக கலைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தொக்காமர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளை சுற்றி சுவர் மற்றும் வேலிகள் அமைக்கப்பட்டதாக வந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களின் நடமாட்டத்தை முடக்கி வைத்திருக்கக் கூடிய சாதியவாத சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தமிழக அரசு அதில் தலையிட வேண்டும்.
உரிய நபர்களை காவல்துறையினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், சட்ட பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மேலும், “திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று 14வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கு பதிவு செய்யாமலே பல பேர் அங்கே சிறைப் படுத்தப்பட்டுள்ளது என்பது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை. இது சட்டவிரோத நடவடிக்கை.
வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் கால் நூற்றாண்டாக அடைக்கப்பட்டிருக்கும் நிலை உள்ளது. எனவே, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்,
சிறப்பு முகாம் என்பதை கலைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் என்று திருமாவளவன் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavan-says-tn-govt-action-at-near-gummidipoondi-caste-wall-issue-463873/