8 12 2022
ஓபிசி வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக திருத்தம் செய்ய வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் பேசியதாவது: ”ஆர்.என்.பிரசாத் தலைமையிலான வல்லுநர் குழு 10.03.1993 அன்று சமூக ரீதியாக முன்னேறிய நபர்களை தவிப்பதற்காக கிரீமி லேயர் முறையை கண்டறிந்து, ஓபிசி இடஒதுக்கீடுகளில் இருந்து கிரீமி லேயர் வகுப்பினரை விலக்குவதற்கான அறிக்கையினை வகைப்படுத்தி சமர்ப்பித்தது.
இது செப்டம்பர் 8, 1993 அன்று ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்துவதற்கும் கிரீமி லேயரை விலக்குவதற்கும்
ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடக்கத்தில், அதாவது 1993ம் ஆண்டில் வருமான வரம்பானது ஒரு லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அதுவே உயர்த்தப்பட்டது. கடைசியாக செப்டம்பர் 2017ல் ரூ .6 லட்சத்திலிருந்து ரூ .8 லட்சமாக DOPTயினால் திருத்தப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கண்ட வருமான உச்சவரம்பு மறுபரிசீலனை செய்யப்படவில்லை. பணவீக்கம், பணமதிப்பு மற்றும் நேர மாற்றங்கள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளாததால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சமத்துவத்தை அடைய முடியாமல், சமூக நீதியின் இலக்கு பாதிக்கப்படுகிறது.
ஓபிசி பிரிவினருக்கான வருமான உச்சவரம்பான 8 லட்சம் ரூபாயை திருத்துவதற்கான மூன்றாண்டு காலம் ஏற்கனவே 01.09.2020 அன்று முடிவடைந்துவிட்டது. எனவே சம்பளம், விவசாயம் மற்றும் பாரம்பரிய கைவினைத் தொழில்களிலிருந்து வரும் வருமானம், வருமான வரம்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளது என்கிற NCBC 2015ன் பரிந்துரைகளின்படி
வருமான உச்சவரம்பை ரூ .15 லட்சமாக திருத்துவது காலத்தின் தேவையாகும்.
இதன் மூலம் ஓபிசி மாணவர்கள் 2023ஆம் கல்வியாண்டு முதல் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், அரசு வேலைகளிலும் சேர்வதற்கும் விண்ணப்பிக்க வழிவகுக்க முடியும். அதனைப்போன்று பொருளாதார காரணி மட்டுமின்றி பலவற்றை உள்ளடக்கியதாக கிரீமி லேயரை நிர்ணயிக்கும் காரணிகளானது திருத்தப்பட வேண்டும்.
எனவே, ஓபிசி வகுப்பினரின் வருமான உச்சவரம்பினை திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/income-ceiling-for-obc-category-should-be-revised-mp-wilson-urges.html