புதன், 1 மார்ச், 2023

மத்திய அரசின் துறைகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன் – உதயநிதி ஸ்டாலின்

 

28 2 23


மோடியை சந்தித்து பேசியது என்ன? டெல்லியில் உதயநிதி விளக்கம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்கிழமை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் (புகைப்படம்: ட்விட்டர்/ உதயநிதி)

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு மோடியிடம் வலியுறுத்தினேன் என பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின். பதவியேற்று முதல்முறையாக இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, ​​மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன். நீட் தேர்வு குறித்து தமிழக மக்களின் மனநிலை தொடர்பாக பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். நீட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டம் தொடரும் என பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன்.

மத்திய அரசு தேசிய அளவில் நடத்தி வரும், கேலோ இந்தியா போட்டிகளை அடுத்த முறை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். தமிழ்நாட்டில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பது தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். தொகுதி வாரியாக மினி மைதானம் அமைக்கும் திட்டம் குறித்து அவரிடம் தெரிவித்தேன். அப்போது அதன் பராமரிப்பு குறித்து அவர் கேட்டறிந்தார்.

பின்னர், முதலமைச்சராக இருந்தது முதல், அவரது அனுபவங்களை பிரதமர் என்னிடம் பகிர்ந்துக் கொண்டார். மத்திய அரசின் துறைகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன் என்று கூறினார்.

மதுரை எய்ம்ஸ் தொடர்பாக பேசினீர்களா என செய்தியாளர்கள் கேட்டப்போது, மதுரை எய்ம்ஸ் தொடர்பாக பேசவில்லை. மத்திய அரசே ஆர்.டி.ஐ பதிலில், அது குறித்து முழு விவரங்களை வழங்கிய பின்னர், அதில் பேச என்ன இருக்கிறது, என்று உதயநிதி கூறினார்

source https://tamil.indianexpress.com/tamilnadu/udhayanidhi-stalin-meets-modi-and-requests-neet-exemption-601490/