செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

2000 ரூபாய் நோட்டு போலியானதா இல்லையா என்பதை கீழே உள்ள வழிமுறைகள் மூலம் சரிபாருங்கள்.

 2000 ரூபாய் நோட்டு போலியானதா இல்லையா என்பதை கீழே உள்ள வழிமுறைகள் மூலம் சரிபாருங்கள்.

போலி ரூபாய் மற்றும் நாணயங்கள் மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 2016 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தனர். இதனால் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் புதிய 200, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே போலி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்ததாக செய்திகள் வெளியாகின. அதுமட்டும் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டு சார்ந்த பல புரளிகள் உலாவரத் தொடங்கியது. அதனால் இன்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்குவதில் தயக்கம் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும் (ஆர்பிஐ) மத்திய அரசும் இந்தியாவில் கள்ள நோட்டுகள் சிக்கலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கள்ள நோட்டுகளை தடுக்கும் வகையில், ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது. மேலும், கரன்சி நோட்டின் சிறப்பு அம்சங்களைக் கண்டறியவும், அவர்களிடம் போலி ரூபாய் நோட்டுகள் இருந்தால் வங்கி அல்லது காவல்துறை அதிகாரிகளுக்கு புகாரளிக்கவும் உதவும் வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
எப்போதும் இந்திய ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தி உருவம் இருக்கும். அதன்படி, புதிய 2000 ரூபாய் நோட்டுகளிலும் காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், மங்கள்யானின் மையக் கருத்தைக் கொண்டுள்ளது. 66 மிமீ x 166 மிமீ அளவு கொண்ட நோட்டு மெஜந்தா எனும் அடிப்படை நிறத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டை போலியானதா இல்லையா என்று சரிபார்க்கும் வழியை சொல்கிறோம்.
நோட்டின் இடது பக்கத்தில் 2000 எண் கொண்ட பதிவு குறிப்பிடப்பட்டிருக்கும்.
இடதுபுறம் நோட்டின் கீழே 2000 எண் கொண்ட மறைந்த படம் ஒன்று காணப்படும்.
2000 மதிப்பு கொண்ட நோட்டு என்பதை குறிக்கும் தேவநாகரி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
நோட்டின் மையத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படம் இருக்கும்.
காந்தி படத்தின் அருகே ‘भारत’ மற்றும் ‘India’ என்ற வார்த்தைகள் மைக்ரோ எழுத்துகளால் எழுதப்பட்டிருக்கும்.
"भारत' , 'RBI' மற்றும் '2000' என்ற வார்த்தைகளுடன் கூடிய கலர் ஷிப்ட் பாதுகாப்பு பட்டயம் நோட்டின் நடுவில் காணப்படும். நோட்டை சாய்க்கும் போது நூலின் நிறம் பச்சை நிறத்தில் இருந்து நீலமாக மாறுபடுவதை பார்க்கலாம்.
மகாத்மா காந்தியின் உருவப்படத்தின் வலதுபுறத்தில் ரிசர்வ் வங்கியின் சின்னத்துடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் அந்த நோட்டின் மதிப்பிற்காக கொடுக்கும் உத்தரவாதம், உறுதிமொழி மற்றும் கையொப்பம் இருக்கும்.
நோட்டின் வலது புறத்தில் உள்ள வெற்றிடத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படம் மற்றும் 2000 மதிப்பிற்கான எலக்ட்ரோடைப் வாட்டர்மார்க் இருக்கும்.
நோட்டின் இடது பக்கம் மேல்புறமும் வலது புறத்தில் கீழ்பக்கமும் ஏறுவரிசை எழுத்துருவில் எண்கள் கொண்ட ரூபாய் நோட்டின் சீரியல் எண் இருக்கும்.
நோட்டின் கீழ் வலதுபுறம் ரூபாய் சின்னத்துடன் கூடிய ₹2000 மதிப்பு எண், நிறம் மாறும் மையில் (பச்சை முதல் நீலம்) அமைக்கப்பட்டிருக்கும்.
வலதுபுறம் அசோக தூண் சின்னம் கொடுக்கப்பட்டிருக்கும்.
மாற்றுத்திறனாளிகள் இந்த ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண சில முக்கிய அம்சங்கள் அம்சங்கள்: நோட்டின் மத்தியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவப்படம் (4), வலது ஓரத்தில் உள்ள அசோக தூண் சின்னம் (11), வலதுபுறம் ₹2000 கொண்ட கிடைமட்ட செவ்வகக் குறியீடும், இடது மற்றும் வலது பக்கங்களில் ஏழு கோண ரத்தக் கோடுகள் ஆகியவை அடர்த்தியான மையில் போடப்பட்டிருக்கும். இதனை தடவிப்பார்த்து அடையாளம் காணமுடியும்.
இது போக, நோட்டின் பின்புறம் நோட்டின் இடதுபுறத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும்.
இடது புறம் நோட்டில் கீழே, ஸ்லோகத்துடன் ஸ்வச் பாரத் லோகோ பொறிக்கப்பட்டிருக்கும்.
நோட்டின் மத்தியில் இந்தியாவில் பேசப்படும் 15 மொழிகளில் இரண்டாயிரம் ரூபாய் என்று எழுதப்பட்டிருக்கும்.
ரூபாய் நோட்டின் மத்தியில் மங்கள்யான் படம் வரையப்பட்டிருக்கும்.
நோட்டின் முன்பக்கம் இருப்பது போலவே பின்புறம் வலது மேல்பாகம் ரூ.2000 என்பதை தேவநாகிரி எழுத்தில் எழுதியிருப்பார்கள்.
இந்த அடையாளங்களை எல்லாம் வைத்து உங்களிடம் உள்ள ரூ. 2000 நோட்டு அசல் நோட்டா, போலியானதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

நன்றி : News 18 தமிழ்
தகவல் : FB Page தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , ஏரல் கிளை - மாணவரணி , தூத்துக்குடி மாவட்டம்.