கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்
ராகுல் காந்தி பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களிடையே பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
வடக்கு கர்நாடகாவின் பிதார் பகுதியில் நேற்று (ஏப்ரல் 17) நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது, கர்நாடக தேர்தலில் 224 தொகுதிகளில் காங்கிரஸ் குறைந்தபட்சம் 150 இடங்களை கட்டாயம் வெற்றி பெற வேண்டும், இல்லையெனில் 2018-ம் ஆண்டு காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியை பா.ஜ.க கவிழ்த்ததைப் போன்று இம்முறையும் பா.ஜ.க செய்ய முயற்சிக்கும் எனப் பேசினார்.
40 கமிஷன், ஊழல்
ராகுல் பேசுகையில், கடந்த முறை நீங்கள் காங்கிரஸுக்கு வாக்களித்தீர்கள், ஆனால் பாஜக உங்கள் வாக்குகளைப் பறிக்க தனது பண பலத்தைப்
பயன்படுத்தியது. இதை இம்முறையும் முயற்சி செய்வார்கள். இதனால்தான் காங்கிரஸ் 150 இடங்களில் பெரும்பான்மை வெற்றி பெற வேண்டும் எனக் கூறுகிறேன். பாஜக 50 இடங்களுக்கு மேல் பெறாது என்று பிதார் மாவட்டத்தில் உள்ள ஹம்னாபாத்தில் நடந்த பேரணியில் ராகுல் கூறினார், அந்த தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ ராஜசேகர் பாட்டீலை மீண்டும் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். 40% அரசாங்கத்திற்கு (பாஜக) 40 இடங்கள் கூட கிடைக்காது என்று பால்கியில் நடந்த பேரணியில் ராகுல் சாடினார். மாநில பாஜக அரசின் ஊழல் குறித்து பிரதமர் பேசவில்லை. சோப்பு தொழிற்சாலை [கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜெண்ட்ஸ் லிமிடெட், மைசூர் சான்டில் சோப்பு உற்பத்தியாளர்] ஊழல், பாஜக எம்எல்ஏவின் மகன் ரூ.8 கோடி லஞ்சத் தொகை பெற்று சிக்கியது குறித்து பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வேலை மோசடிகள் பற்றியோ, பிஎஸ்ஐ (காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆட்சேர்ப்பு) ஊழல் எப்போது நடந்தது என்பது பற்றியோ அவர் பேசவில்லை என்று ராகுல் கூறினார்.
பிரதமருக்கு 3 கேள்விகள், அதானி
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் தனது குரலை முடக்க மைக்கை ஆஃப் செய்கிறது. குஜராத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்து எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்து குரலை முடக்க முயல்கிறது என்றும் காங்கிரஸ் தலைவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து கூறுகையில், “இவர்களைப் பார்த்து நான் பயப்படவில்லை. ஊழல் தொடர்பாக பிரதமர் மற்றும் பாஜக அரசிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்பேன். 40% கமிஷன் பணம் மக்களுடையது. இந்த பணம் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கானது. நான் நாடாளுமன்றத்தில் ஊழல் பிரச்சினையை எழுப்பி, அதானி பற்றி பிரதமரிடம் கேட்டபோது, அவர்கள் எனது மைக்கை அணைத்துவிட்டு பின்னர் என்னை தகுதி நீக்கம் செய்தனர். நான் ஊழலைப் பற்றி பேசியதாலும், பிரதமர் மோடியிடம் கேள்விகள் கேட்டதாலும் இது செய்யப்பட்டது.
நான் மூன்று கேள்விகளைக் கேட்டிருந்தேன்: நாட்டில் உள்ள துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற வணிக நிறுவனங்களை அதானிக்கு கொடுக்கிறார்கள். திரு. அதானியுடன் பிரதமரின் உறவு என்ன?, பிரதமர் ஏன் அவ்வாறு செய்கிறார்?, மேலும் அதானியின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.20,000 கோடி யாருக்கு சொந்தம்? என்று கேட்டு நரேந்திர மோடிஜி முதலில் எனது மைக்கை அணைத்துவிட்டு, பின்னர் என்னை தகுதி நீக்கம் செய்தார் என்று நேரடியாக சாடினார்.
பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் இந்தியா முழுவதும் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துவது வருத்தமளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவரவர் இடம் இருக்க வேண்டும், அனைவரையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற பசவண்ணாஜியின் சிந்தனைகள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் தாக்கப்படுகின்றன. இந்துஸ்தானில் வெறுப்பும் வன்முறையும் பரப்பப்படுகிறது. ஏழைகளில் பணம் பறிகப்பட்டு 2,3 பணக்காரர்களுக்கு வழங்கப்படுவதை மக்கள் பார்க்கிறார்கள் என்றார்.
ஓ.பி.சி
ஞாயிற்றுக்கிழமை கோலாரில் தனது முதல் பிரச்சாரத்தை ராகுல் மேற்கொண்டார். அப்போது சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பிற்கு வலியுறுத்தினார். ஓபிசியினர் அவமதிக்கப்படுவதாக கூறும் நரேந்திர மோடி அரசு, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் விவரங்களை வெளியிட்டு ஓபிசிகள் மீதான தனது அன்பை நிரூபிக்கட்டும் என்று கூறினார்.
“ஓபிசிகள் பற்றி கட்டாயம் பேச வேண்டும். பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஓ.பி.சி மக்களை மேம்படுத்த இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எண்கள் நமக்குத் தெரியாவிட்டால், அவர்களுக்கு எப்படி உதவுவது அல்லது பலப்படுத்துவது? ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் (2011)இருந்தபோது, மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது அதில் சாதி பற்றிய கேள்விகளும் இருந்தன. முழு தரவுகளும் இந்திய அரசிடம் உள்ளது. நரேந்திர மோடி அரசு தரவுகளை வெளியிடவில்லை ஓபிசி சமூகத்தின் பின்தங்கிய நிலை பற்றி டெல்லிக்கு தெரியும், ஆனால் அவர்கள் அதைப் பற்றி பேசுவதில்லை. நாங்கள் அதைப் பற்றி பேசுவோம்,
நாட்டில் உள்ள ஏழை மக்கள் அரசாங்கத்தை நடத்துவதில் பங்கு பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிட வேண்டும். இடஒதுக்கீடு வரம்பு 50%, உள்ளது. இந்த வரம்பை நீக்கிவிட்டு, பல்வேறு சமூகங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை மேற்கொள்ள வேண்டும்” என்றார்
source https://tamil.indianexpress.com/india/rahul-seeks-150-seats-to-stop-bjp-from-stealing-verdict-repeats-call-for-caste-census-641437/