7 4 23
ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆளுநரின் கருத்தை கண்டித்து வரும் 12ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.
ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற குடிமையியல் மாணவர்களுடனான கலந்துரையாடலில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி “ ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை தூண்ட வெளிநாட்டு நிதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகவும் வருத்தமானது. ஆனால் ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் நாட்டின் மொத்த காப்பர் உற்பத்தியில் 40 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு வந்தது என தெரிவித்திருந்தார்.
ஆளுநரின் இந்த கருத்துக்கு தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தன. இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்டம் மற்றும் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்த ஆளுநரின் பேச்சை கண்டித்து வரும் ஏப்ரல் 12ம் தேதி மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதச்சார்பாற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் சர்ச்சைக்குரியதாக உள்ளதாகவும் , சட்டமன்ற மாண்பை குலைக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்தும் வரை போராட்டம் ஓயாது என்றும் மதச்சார்பாற்ற முற்போக்குக் கூட்டணி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/demonstration-against-the-governor-dmk-coalition-parties-announcement.html