18 4 23
உத்தரபிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்பி அதீக் மற்றும் அவரது சகோதரர் கொலை வழக்கில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பா உண்டா என சந்தேகிக்கப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்றப் பின்னணி வழக்குகள் கொண்ட அரசியல்வாதியான அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் கடந்த சனிக்கிழமை இரவில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே சில நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் அருண் மவுரியா (18), லவ்லேஷ் திவாரி (22), சன்னிசிங் (23) ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட லவ்லேஷ் திவாரி, தன் முகநூலில் பஜ்ரங் தள பாந்தா மாவட்ட இணைச் செயலாளர் எனத் தன்னை குறிப்பிட்டுள்ளார். இதை பஜ்ரங்தளம் தலைமை மறுத்துள்ளது. மற்றொரு நபரான அருண் மவுரியாவின் பெற்றோர் 15 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டனர். இதனால், தெருக்களில் யாசகம் எடுத்து அதன் மூலம் பிழைத்துள்ளார். இவர் சரக்கு ரயிலின் பெட்டியை உடைத்து திருடியபோது 2 காவலரை கொன்ற வழக்கில் ஏற்கனவே சிறையில் இருந்துள்ளார்.
மற்றொரு நபரான ஹமீர்பூரின் குராரா கிராமத்தை சேர்ந்த சன்னி சிங் 12 வருடங்களுக்கு முன் குராராவில் சில குற்ற வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற அன்று, அத்தீக்குக்கு பின்புறம் நின்று அவரது தலையில் முதல் நபராக லவ்லேஷ்தான் சுட்டார். இதற்காக அவர் பயன்படுத்திய கைத்துப்பாக்கி துருக்கி நாட்டின் 9 எம்எம் ஜிகானா வகையை சேர்ந்தது. இதன் விலை சுமார் ரூ.7 லட்சம் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அஷ்ரப்பை சுட்ட சன்னி சிங் பயன்படுத்தியதும் துருக்கி நாட்டின் 9 எம்எம் கிர்ஸான் வகை கைத்துப்பாக்கி ஆகும். இதன் விலை சுமார் ரூ.5 லட்சம் எனக் கூறப்படுகிறது. மூன்றாவது நபரான அருண் மவுரியா நாட்டுத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.
துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட இந்த மூவரிடம் சுமார் ரூ.12 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுத் துப்பாக்கிகள் கிடைத்துள்ளன. இவை பாகிஸ்தான் வழியாகவே உ.பி.க்கு வந்திருக்க வாய்ப்புள்ளதாக ஓய்வுபெற்ற உ.பி. போலீஸ் ஆய்வாளருமான தீரேந்திரராய் தனியார் ஊடங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த படுகொலையின் பின்னணியில் ஒரு பெரும் புள்ளி ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட மூவருடன் வந்த இருவர் கொலைக்கு பின் தப்பி விட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.
அத்தீக், அஷ்ரப் சகோதரர்களுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக விசாரணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இருவரும் 2005-ல் ராஜுபால் எம்எல்ஏவை சுடப் பயன்படுத்திய கைத்துப்பாக்கி பாகிஸ்தானிலிருந்து வந்தவை எனக் கூறியுள்ளனர்.
source https://news7tamil.live/former-mp-ateeq-and-his-brothers-murder-case-related-to-the-main-points.html