வெள்ளி, 14 ஏப்ரல், 2023

தமிழ்நாட்டில் அணிவகுப்பு: குச்சி, லத்திக்கு தடை; டி.ஜி.பி முக்கிய உத்தரவு

 14 4 23

DGP Sylendra Babu has said that there is a ban on carrying lathi sticks in RSS processions in Tamil Nadu
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் லத்தி குச்சி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை போலீஸார் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் அணிவகுப்பு பேரணியை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திறந்தவெளியில் பேரணி நடத்த போலீஸார் அனுமதி அளிக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஒழுக்கத்தை கடைபிடித்து அமைதியான முறையில், மற்றவர்களுக்கு எந்தவொரு ஊறும் விளைவிக்காதவாறு பேரணியை நடத்த வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து ஏப்.16ஆம் தேதி தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடக்க உள்ளது. இந்நிலையில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு சில அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.
அதில், “பேரணியின் போது எந்த விதமான பாடலோ அல்லது சைகைகளோ காண்பிக்காமல் நடக்க வேண்டும்.

பொது மக்களுக்கு இடையூறாகவும், வாகன நெரிசல் ஏற்படாத வகையிலும் பேரணி செல்ல வேண்டும். பேரணியில் கலந்துகொள்வோர் எந்தவிதமான குச்சி, லத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dgp-sylendra-babu-has-said-that-there-is-a-ban-on-carrying-lathi-sticks-in-rss-processions-in-tamil-nadu-638466/